கரூரில் நடந்த பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து முன்னெடுக்க வேண்டும் என தவெக தரப்பில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழக அரசின் சார்பில் இந்த சம்பவத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக தரப்பில் இருந்து யாரும் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்காத நிலையில், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனவும், சிசிடிவி ஆவணங்களை முழுமையாக பாதுகாக்க வேண்டும் எனவும், சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் பசுமைவழிச் சாலையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்தில் தவெக தரப்பில் இருந்து முறையீடு செய்துள்ளனர்.