ஏற்கனவே தவெக அதிமுக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பாஜகவின் அண்ணாமலை தவெக திமுகவின் பி டீம் என்று கூறியிருந்தார். அதேபோல பாஜகவும் தி.மு.க.வின், ‘பி டீம்’ விஜய் தான். எத்தனை முறை அழைத்தாலும், அவர் கூட்டணிக்கு வர மாட்டார் என்று இபிஎஸ் சிடம் கூறி அதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதாக பேசப்பட்டது.
இதையெல்லாம் உறுதிபடுத்தும் விதமாக, மதுரையில் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், பேசிய விஜய், பாஜக அதிமுகவை கொள்கை எதிரிகள் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி இன்று எப்படி இருக்கிறது.? என்று கேள்விகேட்டு, அதிமுக தொண்டர்களே விரக்தியில் இருப்பதாக, இபிஎஸ்சை சீண்டும் விதமாக பேசியிருந்தார்.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு சாதகமான தென்மண்டலத்தில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் இழப்பை சந்தித்தது. தென் மண்டலத்தின் மையப்புள்ளியான மதுரையின் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. 5 தொகுதிகளை அதிமுக வென்றது. இதற்குப்பின் அதிமுகவில் எழுந்த உட்கட்சி பூசலால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக மேலும் பின்னடைவை சந்தித்தது.
தென்மாவட்டங்களிலும் தென்மாவட்டங்களின் மையப்புள்ளியான மதுரையிலும் அதிமுகவின் செல்வாக்கு ஏற்கனவே சரிந்துள்ள நிலையில், விஜய் அதிமுகவை விமர்சிருப்பது அதிமுகவை மேலும் பலகீனப்படுத்தும் முயற்சியாகவே கருதுகிறாராம். இதன் காரணமாக, திமுகவுக்கும் தவெகவுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க இபிஎஸ் முடிவெடுத்திருக்கிறாராம்.
இந்நிலையில், மதுரையில் அதிமுகவின் அடையாளமான, ஆர்.பி.உதயகுமார், செல்லுர்ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகிய மூவரிடமும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கை தூக்கி நிறுத்தும் வகையில் பிரச்சார யுக்திகளை மேற்கொள்ளுமாறு இபிஎஸ் தரப்பு கூறியுள்ளதாம்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது 4 நாட்கள் மதுரை சுற்றுப்பயணத்தை மிக தெளிவாக திட்டமிட்டிருக்கிறாராம். செப்டம்பர் 1-ம் தேதி திருபரங்குன்றத்தில் இருந்து தனது மதுரை சுற்றுப்பயணத்தை துவங்கும் இபிஎஸ் 2-ம் தேதி மேலூர், 3-ம் தேதி மதுரை தெற்கு மேற்கு மத்திதிய்லும் 4-ம் தேதி சோழவந்தான் உசிலம்பட்டியிலும் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். பரப்புரையின் போது பிரமாண்ட மக்கள் கூட்டத்தை கூட்டவும் மூவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
பிரச்சாரத்தில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம், மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல், மேயரின் கணவர் வசந்த் கைது விவகாரம், திமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து புள்ளி விபரங்களை வெளியீட்டு திமுகவின் இமேஜை உடைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயத்தில், இபிஎஸ்சின் 4 நாள் மதுரை பரப்புரை பயணத்தில், அதிமுகவை விமர்சித்த தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் ரீதியாக தகுந்த பதிலடி கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.
இபிஎஸ் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மதுரை அதிமுகவினர்.
Related posts
Click to comment