அன்பில் மகேஷ் பொய்யாமொழி V/s கே.என்.நேரு.!? திருச்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் வெளிநடப்பு..


திருச்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் லூர்துசாமி அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, மு.மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை ஆணையர், நகரப் பொறியாளர், நகர் நல அலுவலர், செயற் பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.


மாநகராட்சி கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே அதில், பங்கேற்ற துணை மேயர் உள்பட திமுக கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி, மேயருக்கு எதிராக குரல் கொடுத்து வெளிநடப்பு செய்தனர்.
திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் செயல்பட்டு வருபவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவரது தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளது. இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்பது பல வருடங்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியாக மாறிவிட்ட அரியமங்கலம் அம்பிகாபுரம் திடீர் நகர் பகுதியில் மக்கள் தொகையும் கூடிவிட்டது. இப்பகுதி மக்கள் துர்நாற்றத்தை தாங்கிக்கொண்டு வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகரின் மையப்பகுதில் இந்த குப்பைக்கிடங்கு அமைந்துள்ள நிலையில் பல்வேறு சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது.
குப்பைகிடங்கை அகற்றவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் கோரிக்கையின்படி, குப்பைகிடங்கை அகற்றுவதாக அப்பகுதி பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். அதேபோல,மாநகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர் கோரிக்கையை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், அதே குப்பைக்கிடங்கு பகுதியில், கோழி கழிவுகளை வைத்து மீன் தீவனம் தயாரிக்கும் பணிக்கு மாநகராட்சி மேயர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்டித்து அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட மேல அம்பிகாபுரம், திடீர் நகர் பகுதி மக்கள் போராட்டங்களை தொடங்கி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் முறையிட்டனர்.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை உடனே நிறுத்த ஆணையிட்டார்.


இச்சூழலில், இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி மாமான்ற கூட்டத்தில், இந்தத் திட்டம் தொடர்பாக மீண்டும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்தி உள்பட தி.மு.க. கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர் ரெக்ஸ், வக்கீல் கோவிந்தராஜன், முன்னாள் மேயர் சுஜாதா, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் என மொத்தம் 30 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயர் அன்பழகனை கண்டித்து ஒரே நேரத்தில் வெளிநடப்பு செய்தனர்.
65 வார்டுகளை கொண்ட திருச்சி மாநகராட்சியில் 30 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும், குறிப்பாக திமுக கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தது திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மட்டுமின்றி திருச்சி திமுகவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி தெற்கு திமுக மாவட்ட தலைவரும், திருச்சி திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் திமுக மேயரை கண்டித்து வெளிநடப்பு செய்திருப்பது திமுகவினர் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் எழுந்த பிரச்னை, திருச்சியில் கே.என் நேரு – மகேஷ் பொய்யாமொழி கோஷ்டி மோதலை வெளிப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மக்கள் பிரச்னையில் இரு அமைச்சர்களுக்குள் கோஷ்டி பூசல் எழுந்தால் எங்கள் பிரச்னையை தீர்த்து வைப்பது யார்.? என்ற கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். மக்கள் பிரச்னையில் வாக்குறுதி கொடுத்த எங்கள் தொகுதி எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அறிவுரையை ஏற்காத மேயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியமங்கலம் குப்பைக்கிடங்கு பிரச்னையில் முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கையை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.


banner

Related posts

திமுக வுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட்.. வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்..

Ambalam News

மனிதர்களை விடுத்து நாய்களுக்கு பாதுகாப்பு கேட்பவர்கள் தான் விலங்கு நல ஆர்வலர்களா.?

Ambalam News

தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 – தேமுதிக அறிவிப்பு

Ambalam News

Leave a Comment