அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை அடுத்து இ.பி.எஸ் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ள சி.விசண்முகம் எஸ்.பி.வேலுமணி தரப்பை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேர் தவெக அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதையடுத்து இ.பி.எஸ் தரப்புக்கும் சி.விசண்முகம் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் மோதல் முற்றியது. இந்நிலையில் தவெக தரப்புக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.
இந்நிலையில், அதிமுக தலைமைக்கு எதிராகவும் தவெக அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட சி.விசண்முகம் எஸ்.பி.வேலுமணி தரப்பு மீது நடவடிக்கை எடுக்ககோரி சபாநாயகரை சந்திக்க காத்திருக்கிறது இ.பி.எஸ் தரப்பு. அதேவேளையில் சி.விசண்முகம் எஸ்.பி.வேலுமணி தரப்பும் சபாநாயகரை சந்திக்க காத்திருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 பேர் தவெகவை ஆதரித்துள்ளனர். 22 பேர் தவெகவை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
இந்த சூழலில் சட்டப்படி இனி என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.. கட்சி தலைமை உத்தரவை மீறி செயல்பட 2/3 பங்கு உறுப்பினர் அதாவது 32 பேர் வேண்டும். 25 பேர் மட்டுமே ஆதரித்து வாக்களித்து உள்ளதால் அவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் ஆகிறார்கள்.
சட்டமன்ற சபாநாயகர் அந்த 25 பேரின் உறுப்பினர் பதவியையும் தகுதி இழப்பு செய்யலாம். சபாநாயகர் தவெக ஆட்சியை தக்கவைப்பதற்காக அப்படி நடவடிக்கை எடுக்க மறுத்தால் கட்சி தலைமை அந்த 25 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க வழியுண்டு.
அந்த கோரிக்கையையும் சபாநாயகர் மறுத்தால் நீதிமன்றத்தை நாடி நீக்க வைக்க நடவடிக்கை எடுக்கலாம்.
சட்டமன்றத்தில் தனி அணியாக செயல்படலாம் என்று சிலர் கூறிவருகின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைமை யாரோ அவரது வார்த்தைகளுக்கு கட்டுப்படாதவர்கள் தகுதி நீக்கப்பட வேண்டும். அந்த வகையில் அந்த 25 பேர் பதவி இழப்பது உறுதி உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தங்களின் சுய தேவைக்கோ, அதிகார ஆசைக்கோ ஆட்பட்டு அதிமுக எனும் மாபெரும் கட்சியை உடைக்க முயற்சித்து, தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு இப்போது தவித்து வருகிறார்கள். செங்கோட்டையனுடன் சேர்ந்து இவர்களும் தவெகவில் ஐக்கியமாவதை தவிர வேறு வழியில்லை. ஆக நினைத்தது போலவே அதிமுகவை உடைத்து வெற்றியடைந்திருக்கிறார் கே.ஏ.செங்கோட்டையன்.
அதிமுக கொறடாவாக இ.பி. எஸ். தரப்பு உறுப்பினரே நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சி.விசண்முகம் எஸ்.பி.வேலுமணி குழுவின் அடுத்த நகர்வு அதிமுகவில் மீண்டும் இணையும் போராட்டமாகத்தான் இருக்கும்..

