திண்டுக்கல் சீனிவாசன் Vs ஐ.பி.செந்தில்குமார் | 75 வருட வரலாற்றில் திண்டுக்கல் தொகுதியில் முதன் முறையாக திமுக – அதிமுக மா.செக்கள் நேருக்கு நேர் மோதல்..


தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சற்று வித்தியாசமான தேர்தல் களமாக இருக்கிறது. எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில், அதிமுகவும் திமுகவும் தங்கள் கட்சிக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதியிலும் மிக கவனமாக தேர்வு செய்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலுமே கடும் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. வேட்பாளர்கள் கடுமையாக மட்டுமின்றி மிக கவனமாக சாதுர்யமாகவும் களப்பணி செய்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் இருக்கிறது தொகுதிகளின் நிலவரம்.

இச் சூழலில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மிக கடுமையான போட்டி நிலவும் முக்கிய தொகுதிகளில் திண்டுக்கல் சட்டசபை தொகுதியும் இடம் பெற்றிருக்கிறது. அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அதிமுகவின் சீனியர் மட்டுமின்றி, அதிமுக பொருளாளர், அமைப்பு செயலாளர், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வகித்து வரும் திண்டுக்கல் சீனிவாசன் மூன்றாவது முறையாக திண்டுக்கல்லில் களம் இறங்குகிறார். திண்டுக்கல் சீனிவாசனுக்கு இது எட்டாவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில், நம்பிக்கையோடு திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிமுக தலைமை தொகுதியை ஒதுக்கியுள்ளது.

திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து திண்டுக்கல் சட்டசபை தொகுதியின் திமுக வேட்பாளராக திமுகவின் சீனியர்களில் ஒருவரும் மூத்த அமைச்சருமான ஐ.பெரியசாமியின் மகனான ஐ.பி.செந்தில்குமாரை களமிறக்கி இருக்கிறது திமுக தலைமை. ஐபி செந்தில் குமாருக்கு இது நான்காவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

75 வருட திண்டுக்கல் சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அதிமுக மாவட்ட செயலாளரும், திமுக மாவட்ட செயலாளரும் நேருக்கு நேர் மோதுவது குறிப்பிடத்தக்கது. இதுவரை இரண்டு முறை மட்டுமே அதிமுகவும் திமுகவும் நேருக்குநேர் இந்த தொகுதியில் மோதி இருக்கிறது.

தமிழக அரசியலில், திண்டுக்கல் தொகுதியின் வரலாற்ரில், 1952 தேர்தலில் காங்கிரஸும் – சிபிஐ கட்சியும் நேருக்கு நேர் மோதின. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில், 1957ல் காங்கிரஸ் – சிபிஐ, 1962ல் காங்கிரஸ் – சிபிஐ என இருந்தது. 1967ல் காங்கிரஸ் – சிபிஎம், என்று களம் மாறியது. 1971ல் காங்கிரஸ் -சுயேச்சை, 1977ல் சிபிஎம் – திமுக, 1980 ல் மீண்டும் சிபிஎம் -காங்கிரஸ், 1984 ல் அதிமுக – சிபிஎம் கட்சியும் மோதின.

அதற்குப் பிறகு 1991 தேர்தலில் அதிமுக – சிபிஎம் கட்சியுடன் மோதியது இந்த தேர்தலில்,அதிமுக வேட்பாளர் நிர்மலா சிபிஎம் கட்சியின் தங்கராஜனை தோற்கடித்தார். 1996 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-திமுக நேரடியாக மோதியது. அந்த தேர்தலில் திமுக வேட்பாளராக மணிமாறனும் அதிமுகவின் வேட்பாளராக மருததராஜும் மோதினர். முடிவில், அதிமுக வேட்பாளர் மருதராஜை தோற்கடித்து, திமுக வேட்பாளர் மணிமாறன் வெற்றி பெற்றார். அதற்கு பிறகு மூன்று தேர்தல்களில் அதிமுக திமுக என மாறி மாறி கூட்டணி வைத்த சிபிஎம் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கியது. அதில், திமுக, மதிமுக, பாமக வேட்பாளர்களை தோற்கடித்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றார் பாலபாரதி.

கடைசியாக 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பசீர் அகமதுவை தோற்கடித்து,வெற்றி பெற்றார் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சீனிவாசனை எதிர்த்து போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பாண்டி தோல்வியை தழுவினார்.

திண்டுக்கல் சட்டசபை தொகுதியின் வரலாற்று நிலவரம் இப்படியிருக்க, இந்த வரலாற்றை உடைக்கும் விதமாக, 75 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக அதிமுகவின் மாவட்ட செயலாளர், திமுக மாவட்ட செயலாளர் இருவரும் முதல்முறையாக களத்தில் வேட்பாளர்களாக எதிர்கொள்வது திண்டுக்கல் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்சியின் மேல்மட்ட செல்வாக்கு, சமுதாய மக்களின் செல்வாக்கு, இளைஞர்கள் கூட்டம் என இருவரும் சரிசமமான பலத்தோடு களத்தில் நிறக்கின்றனர்.

யார் வெற்றி பெற்றாலும் அதிக ஓட்டு வித்தியாசம் இருக்கப்போவாதில்லை என்றாலும், ஐ.பி. செந்தில்குமார் தரப்பு கவனமாக காய் நகர்த்தினால் வெற்றி நிச்சயம் என்கிறது தொகுதி நிலவரம்.


banner

Related posts

தமிழ்நாட்டில் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.! தமிழ்நாடு அரசு உத்தரவு

Ambalam News

வனத்துறை காவல் சித்ரவதை மாரிமுத்து மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட போராட்டம்..

Ambalam News

‘’ஆபரேஷன் அகால்’’ இராணுவத்தின் தேடுதல் வேட்டை – 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. தொடரும் தேடுதல் வேட்டை…

Ambalam News

Leave a Comment