
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கடந்த சில வாரங்களாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு தவெகவுடன் கூட்டணி என்று சலசலப்பை உண்டாக்கி வருகின்றனர். திமுக உயர்மட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை காங்கிரஸ் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரண்டு கட்சி தலைமையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி என்றும், இதன் பிறகு கூட்டணி குறித்து பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் மீண்டும் இன்று காலையே தன் எக்ஸ் பக்கத்தில் திமுகவை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், டெல்லி காங்கிரஸ் கூட்டம் தொடர்பான வெளியாகியுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் திமுகவை விமர்சித்ததோடு திமுக ஐடி விங்கையும் விமர்சித்துள்ளார். திமுக ஐடி விங்கையும் விமர்சித்துள்ளார். அதில், “#இந்த அல்றசில்றIT Wing பாவம். நலம் பெற வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை சீண்டியிருப்பது கூட்டணி கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்களை அடக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை திணறுவதாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது

