இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாகவும் விளங்கிய தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளான இன்று தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது,
தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ராமாநாதபுரம் பரமக்குடியில் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு இடத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழக அரசு சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்
பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தியாகி இமானுவேல் சேகரனுக்கு 2 மாதங்களில் சிலையும் மணிமண்டபமும் திறக்கப்படும். பரமக்குடியில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைக்கும் பணி 95% முடிவடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்
நாட்டிற்கும், விளிம்புநிலை மக்களுக்கும் பெரும் தொண்டாற்றிய இம்மானுவேல் சேகரன் அவர்களின் புகழ் ஓங்கட்டும்.. என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை பணிகளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், 7000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பி.என்.எஸ்.எஸ். 163 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சட்ட ஒழுங்கு ஏடிஜிபி, டேவிட்சன் ஆசீர்வாதம் தலைமையில் ஒரு ஐஜி, நான்கு டிஐஜிக்கள், 24 எஸ்பிக்கள், 32 ஏடிஎஸ்பிக்கள், 70 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 7,435 காவலர்கள் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 நவீன ரக சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்ட 161 பகுதிககளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக காவல்துறை அறிவித்துள்ளது.
தொடர்ந்து இமானுவேல் சேகரனார் நினைவிடத்திற்கு வருபவர்கள் இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது, வாகனத்தின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து பயணிக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது,
நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். அஞ்சலி செலுத்த வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். அரசியல் கட்சியினா், சமுதாயத் தலைவா்களுக்கு நினைவிடம் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இமானுவேல் சேகரன் நினைவிடம் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று அந்தப் பகுதியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறது. பரமக்குடி பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் தங்க வைக்கப்பட்டனா். இதனால் நேற்றும் இன்றும், பரமக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அதிமுக சார்பில் யாரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம், மீறி வருகை வரும் பட்சத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தேவேந்திர பண்பாட்டு கழகம் பொறுப்பேற்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.