காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து, த.வெ.க. செயல்பாட்டை முடக்க நினைக்கிறது ஆளுங்கட்சி என்று அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் மீதான வழக்கை சுட்டிக்காட்டி விஜய் கண்டனம் தெரிவித்து, வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளார். த.வெ.க. புஸ்லி ஆனந்த் மீதான வழக்கு குறித்து சமூக ஊடகங்களில் த.வெ.க. தொண்டர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம்செப்.07 அன்று த.வெ.க. மாநாடு தொடர்பாக அனுமதி பெரும் நோக்கில், திருச்சி காவல் ஆணையரை சந்திக்க சென்றபோது, ஏர்போர்ட் அருகே உள்ள கோவிலில் சாமி கும்பிட புஸ்லி ஆனந்த் டீம் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியுள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவர்களை கிளம்ப சொல்லி இருக்கின்றனர். புஸ்லி ஆனந்த் டீம் போலீசுடன் வாக்குவாதம் செய்துள்ளது. இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள த.வெ.க தலைவர் விஜய்.., “தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத, வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, த.வெ.கவின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் மீதும், தவெக தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப் பூர்வமான பிரதான நடவடிக்கைதான்.
மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்.
அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தவெக தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஆனந்த் மீதும் தவெக தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்