என்கவுண்டர்: எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை… கொலையாளியை என்கவுண்டர் செய்தது போலீஸ்


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் உள்ள அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கபாண்டியன் மணிகண்டன் ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்றிரவு மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது தந்தை மூர்த்தியை கடுமையாகத் தாக்கினார்.

இந்தச் சண்டையை கண்ட மற்ற தொழிலாளர்கள் அவசர உதவி எண் 100 க்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் காவலர் அழகு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போதையில் இருந்த மூவரையும் சமாதானப்படுத்த முயன்றபோது, அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து மூவரும் ஒன்றாக சேர்ந்துகொண்டு போலீசாரை ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர்.

இதில், சண்முகவேல் மற்றும் காவலர் அழகு ஆகிய இருவரும் ஆயுதங்கள் இன்றி இருந்ததால், தப்பி ஓட முயற்சித்துள்ளனர். அப்போது, மணிகண்டன் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். நெற்றியிலும், கழுத்திலும் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர் அழகு, அங்கிருந்து தப்பிச் சென்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் நடந்ததைக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மணிகண்டன் மற்றும் தங்கபாண்டியன் இருவருடைய மனைவிகளும் தங்கள் குழந்தைகளுடன் தோட்டத்திலிருந்து அவசரமாக வெளியேறி ரோந்துப் பணியில் இருந்த போலீசாரிடம் தஞ்சமடைந்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், கோவை மண்டல டி.ஐ.ஜி சசிமோகன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி யாதவ் க்ரிஷ் அசோக், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தோட்டத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

சண்முகவேலின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூராய்வு முடிந்த நிலையில், அவரது உடல் காவல்துறை அதிகாரிகளின் மரியாதைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே, கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையில், மூர்த்தி மற்றும் தங்கபாண்டி ஆகியோர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரணடைந்தனர். கொலை, கொலை முயற்சி, பொதுச் சொத்து சேதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ஆனால், முக்கியக் குற்றவாளியான மணிகண்டனை காவல்துறை தீவிரமாகத் தேடி வந்தது. இந்நிலையில் கைது செய்ய முயன்றபோது, அவர் சரவணகுமார் என்ற போலீசாரை தாக்கி, அரிவாளால் வெட்டிவிட்டுத் விட்டு தப்பிக்க முயலும் போது போலீஸ் சுட்டதில் மணிகண்டன் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த என்கவுண்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


banner

Related posts

இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்றனர்..

Ambalam News

தனிப்படைகளை கலைக்க.? போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு!

Admin

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் – தமிழகத்திற்கு 15,516 கோடி முதலீடுகள் – 17,613 வேலைவாய்ப்புகள்..

Ambalam News

Leave a Comment