சிலைடு சிங்காரம் – கடுப்பு கந்தசாமி ..அரசியல் அரட்டை..
டி.டி.வி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து பறந்து விட்டார் பார்த்தீரா.? அண்ணாமலையை ஓரங்கட்டும் பாஜக .! செங்கோட்டையனை ஓரங்கட்டும் எடப்பாடி பழனிச்சாமி.! அடுத்தடுத்த மூவ் அதிரடியாக இருக்குமோ.? என்ற கேள்வியோடு வந்து அமர்ந்தார் ‘’சிலைடு சிங்காரம்’’
ஆமாம்.. ஆமாம்.. என்று தலையசைத்த கடுப்பு கந்தசாமி ஒரு கூட்டு பறவைகளா.? அவர்கள்.? இலவு காத்த கிளிகள் பறக்கத்தானே செய்யும்.! இதுவே ரொம்ப லேட். தினகரன் பேட்டிய கவனிச்சியா.? சிங்காரம். ‘’பாஜகவை நம்பி இருந்தோம் எதுவும் நடக்குற மாதிரி தெரியல’’ன்னு சொல்றாரு.. இவ்வளவு நாளா பாஜக அதிமுகவுடன் சேர்த்து வைத்துவிடும் என்று நம்பி காத்திருக்கின்றனர். அது நடக்கவில்லை என்றதும் வெளியேறி விட்டாட்டார்கள்.. பாஜகவுக்கு எடப்பாடியாரின் கூட்டணி முக்கியம். தினகரன், ஓபிஎஸ் இருவருக்காக பாஜக எடப்பாடியாரை பகைத்துக் கொள்ளாது. இவ்வளவுதான் அரசியல்.
நாளைக்கு ‘’செங்கோட்டையன் நடத்துற கூட்டத்துக்கு முன்பே அவரை அதிமுகவினர் சமாதானப்படுதிடுவாங்க’’ ன்னு நினைச்சா.? பிரச்சனை பெரிசாகிக்கிட்டே போவுதே.?
அட நீ என்னப்பா.? விவரம் கெட்ட ஆளா இருக்க.? எடப்பாடியார் அதிமுகவில் ஜெயலலிதா பாணியை பின்பற்றி அரசியல் செய்கிறார்.? அதனாலதான் இந்த முட்டல், மோதல்கள் எல்லாம் நடக்குது.? சமாதானத்துக்கு வழியில்லை.
ஜெயலலிதா பாணியா.? ஒண்ணும் புரியலயே கந்தசாமி.!! கடுப்படிக்காம விவரமா சொல்லுய்யா..
சிலைடு சிங்காரம்… பலகட்ட அரசியல் மோதல்களை கடந்து, அதிமுகவை கைப்பற்றிய ஜெயலலிதா, கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், எம்ஜியாருடன் அரசியலில் பயணித்த அமைச்சர்கள், சீனியர்களை ஓரம்கட்டி செல்லாக்காசு ஆக்கினார். தனக்கு நம்பிக்கையானவர்களை மட்டும் அருகில் வைத்துக்கொண்டு, அனைத்து அதிகாரங்களையும் தன்னிடமே குவித்து வைத்துக் கொண்டு அதிரடி அரசியல் செய்தார். அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகள் ஆக்கப்பட்டனர். எந்த அமைச்சரும் தனிப்பட்ட முறையில், நிர்வாகத்திலும் சரி.. கட்சி விசயமானாலும் சரி.. முடிவெடுக்க அதிகாரம் கிடையாது. கார்டனில் இருந்து உத்தரவு வரவேண்டும்.
அதே பாணியைத்தான் எடப்பாடியார் கையில் எடுத்திருக்கிறார். சீனியர்களை ஓரம்கட்டுவது, அவர்களுடைய எதிரிகளை கட்சிக்குள் வளர்த்து விடுவது, கட்சிக்குள் உரிய மரியாதை கொடுக்காமல் புறக்கணிப்பது, இது தான் அந்த பாணி. செங்கோட்டையன் விவகாரத்திலும் இதே தான் நடந்தது. பொருத்து..பொருத்து பார்த்தவர் பொங்கி எழுந்து விட்டார்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருப்பவர். சொந்த தொகுதியில் செல்வாக்கான மனிதர். அதிக்கடவு – அவிநாசி திட்டத்தில் ஆரம்பித்த பிரச்னை. சொந்த தொகுயில் ஒரு சீனியரை அவமானப்படுத்தினால் கோவம் வரத்ததானே செய்யும்.. சிலைடு சிங்காரம்.
எடப்பாடியார் சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்பொழுதோ சமாதானப்படுத்தி இருப்பார். மார்ச் மாதம் நடந்த பேரவைக் கூட்டத்தொடரில் கூட செங்கோட்டையன் தனித்தே இயங்கினார். எடப்பாடியார் தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் புறக்கணித்தார். எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி போன்ற சீனியர்கள், அவரைச் சமாதானப்படுத்த முயன்றும், அது பலனளிக்கவில்லை. அப்போதாவது எடப்பாடியார் நேரடியாக செங்கோட்டையனை சமாதானப்படுத்தி இருக்கலாமே.! அவர் அதை விரும்ப மாட்டார். மாறாக, கட்சிக்குள் செங்கோட்டையன் குழப்பத்தை விளைவிப்பதாகவே பரப்பப்பட்டு வருகிறது.
அப்ப நாளைக்கு செங்கோட்டையன் நடத்துற கூட்டம் அதிரடியா இருக்கும் அப்படித்தானே.?
அதிரடியெல்லாம் இல்ல.! சசிகலா, டிடிவி தினகரன் ஓபிஎஸ் இவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பதே அவரது அஜான்டாவாக இருக்கும். கொங்கு பெல்ட்ல எடப்பாடியாரின் செல்வாக்கை சிதறடிக்குற விதமாகவும் இருக்கும்.. குறிப்பா, எடப்பாடியாரோட செல்வாக்க கேள்விக்குறியாக்கும் முயற்சியாதான் அவரோட மூவ்மெண்ட் இருக்கும், ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பால் அவரது சமுதாய வாக்குகள் சிதறியது. இப்போ கொங்கு மண்டலதில் செங்கோட்டையனால் எடப்பாடியாரின் சமுதாய வாக்குகள் சிதறடிக்கப்படும். செங்கோட்டையனும் எடப்பாடியாரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மிஸ்டர் க்ளீன் இமேஜ் செங்கோட்டையனுக்கு இருக்கிறது. அதிமுக சீனியர் நிர்வாகிகள், சீனியர் தொண்டர்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. கட்டாயம் அதிமுகாவின் வாக்குகள் கொங்கு மண்டலத்தில் சிதறும்.
அதேபோல, இராமநாதபுரம் மாவட்ட அரசியலில் செல்வாக்கான அன்வர்ராஜா மாவட்டத்தில் உள்ள சிறும்பான்மையினர் பெல்ட்டில் செல்வாக்கானவர். ஏற்கனவே அன்வர்ராஜா விலகல் சிறும்பான்மையினர் வாக்குககளை கேள்விக்குறியாக்கி விட்டது. இன்னும் சில அதிமுக முக்கிய புள்ளிகளும் விலகுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படியே போனால் அதிமுக செல்வாக்கை இழந்து நிற்கும். எடப்பாடியார் சீனியர்களை ஓரங்கட்டி கட்சிக்குள் அதிகாரங்கள் அனைத்தும் அவர் கையில் வைத்துக்கொள்ள நினைக்கின்றார்.. சீனியர்கள் எடப்பாடியாரின் ஆட்சிக்கனவை நொறுக்குகிறார்கள் அவ்வளவுதான்.
அப்ப தினகரன் தலைமை, அல்லது ஓபிஎஸ் தலைமையில் ஒன்று சேர்வார்களா.? விஜய்க்கு ஆதரவளிப்பார்களா.?
ஓபிஎஸ் இரண்டு முறை முதலமைச்சராக இருந்து இருக்கிறார். அதிமுகவின் சீனியர். செங்கோட்டையன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். எம்ஜிஆர் காலத்தில் அரசியலுக்கு வந்தவர். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் மிகவும் நெருக்கமாக இருந்தவர். இவர்கள் அரசியல் அனுபவம் இல்லாத தவெக தலைமையில் தவெகவுடன் கூட்டணி சேர்வார்கள் என்பதே அரசியல் முரண். இதை அவர்களது ஆதரவாளார்கள் முதலில் ஏற்றுக்கொள்வார்களா.? மூத்த தலைமுறை வாக்காளர்கள் நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வார்களா.? தினகரன் எந்த பக்கம் திரும்புவார் என்பது ராஜ ரகசியம்.!?
டிடிவி.தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் இவர்கள் இணைந்து ஒன்றுபட்ட போட்டி அதிமுகவாக களமிறங்கினால், மக்களிடம் செல்வாக்கு பெறுவதோடு, பாஜக கூட்டணியால் விரக்தியில் இருக்கும் அதிமுக தொண்டர்களின் ஆதரவையாவது பெறலாம். அது ஆரோக்கியமான அரசியலாகவும் அமையும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதற்காக விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அது எடப்பாடி பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்தபோது, ‘’இது தலைவர்களின் கூட்டணி.. அதிமுக தொண்டர்களின் கூட்டணி அல்ல’’.. என்று விமர்சிக்கப்பட்டதை போலவே, இவர்கள் கூட்டணி ‘’ஆதாயக்கூட்டணி ‘’என்றுதான் விமர்சிக்கப்படும். அது எடப்பாடியாருக்கு செல்வாக்கை பெற்றுத்தந்துவிடும்.
இவர்களது அரசியல் பார்வை எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்…
அண்ணாமலை விவகாரம் போகிற போக்கை பார்த்தால் அவர் பிஜேபியை விட்டு வெளியேறிவிடுவார் போல தெரிகிறதே.?
இந்நேரம் வெளியேறி இருக்க வேண்டும். அமித்ஷாவுடைய சந்திப்பின் போது, பாஜகவின் தமிழக தலைவர்கள் அனைவரும் அண்ணாமலை மீது புகார் பட்டியல் வாசித்திருக்கின்றனர். ஏற்கனவே அண்ணாமலை மீது, பாஜக தலைமைக்கு பல புகார்கள் சென்ற நிலையில் தான், அவரை டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு அமித்ஷா அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
‘’அண்ணாமலை கூட்டணியில் மோதலை உருவாக்கி விடுவார்’’ என்று பாஜக தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. அதேபோல, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று அதிமுக வலியுறுத்தியுள்ளதாக பேசப்படுகிறது. அண்ணாமலையை சட்டசபைக்குள் நுழைய விட்டால், அது அதிமுகவுக்கு தலைவலியை கொடுத்துவிடும் என்று அதிமுக தலைவர்கள் கருதுகிறார்களாம். ஆகவே விரைவில் அவர் வெளியேறிவிடுவார்.
மேலும், டிடிவி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் ,தவெகவுடன் கூட்டணி குறித்து தனித்தனியாக சீரியசாக விவாதித்து வருகிறதாம். விஜய் தரப்பிலிருந்து சிக்னல் விட்டு விட்டு வருகிறதாம். விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு தரப்புடன் பேசி வருவதாகவும் தகவல்கள் வருகிறது. நாளை காலை செங்கோட்டையன் என்ன அறிவிக்கப்போகிறார் என்பதை போய் பார்ப்போம் சிங்காரம்..
Related posts
Click to comment