2, 3 நாட்களில் வீடு திரும்புவார் முதல்வர் – மு.க.அழகிரி பேட்டி..?


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை, அவரது மூத்த சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தினமும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது வழக்கமான உடல் பரிசோதனை என்று கூறப்பட்டாலும், பின்னர் தலைச்சுற்றல் காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை சபரீசன் ஆகியோர் மருத்துவமனையில் உடன் உள்ளனர்.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நேரில் சென்று முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்டோர் முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தனர்.

முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அவர் மருத்துவமனையில் இருந்தபடியே, தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு அங்கிருந்தபடியே அலுவல் பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் திடீரென முதல்வர் ஸ்டாலினை அவருடைய அண்ணன் மு.க.அழகிரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் கருத்து மோதல் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரி, திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதையடுத்து அவரை மீண்டும் திமுகவில் சேர்க்க அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முயற்சி செய்தும் கருணாநிதி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மறைவை தொடர்ந்து அழகிரி, மீண்டும் திமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் திமுக தோற்று போகும் என மு.க. அழகிரி பல்வேறு பேட்டிகளில் கூறி வந்ததால் அவருடன், ஸ்டாலின் உள்ளிட்டோர் அரசியல் ரீதியாக எவ்வித தொடர்பும் இன்றியே இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் வென்று முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட விழாவுக்கு அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அழகிரி விழாவிற்கு வரவில்லை. தனது மகன் துரை தயாநிதியையும் மகள் கயல்விழியையும் அனுப்பியிருந்தார். ஸ்டாலின் முதல்வரான பின் மதுரை செல்லும் ஒவ்வொரு முறையும் அழகிரியை சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடம் எழுந்துவந்தது.

இந்த நிலையில் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி.யில் சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின், நேரில் சென்று தனது அண்ணன் மகனை சந்தித்து நலம் பெற வாழ்த்தினார். மேலும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்றதும் ஜல்லிக்கட்டு தொடக்க விழாவுக்கு மதுரைச் சென்றபோது, தனது பெரியப்பா அழகிரியை , சந்தித்து ஆசி பெற்றார்.

தற்போது தான் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். இன்று இரண்டாவது நாளாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து தனது சகோதரரை மீண்டும் சந்தித்து விட்டு வெளியே வந்த அழகிரி அவர்கள், ‘’முதல்வர் நலமாக இருக்கிறார். இன்னும் 2 அல்லது 3 தினங்களில் வீடு திரும்புவார்’’ என்று கூறி சென்றிருக்கிறார்.



banner

Related posts

நேபாளத்தில் வெடித்த போராட்டம் : துப்பாக்கி சூட்டில் 16 பேர் பரிதாப பலி, ஊரடங்கு உத்தரவு அமல்!

Ambalam News

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Ambalam News

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – ஆய்வாளர் ஸ்ரீதரின் அப்ரூவர் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..

Ambalam News

Leave a Comment