
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. அதிமுக திமுக இரு கட்சிகளும் பிரச்சார களத்தில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து மோதி வருகின்றன. வெற்றி ஒன்றையே இலக்காக வைத்து, திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இந்த தேர்தலில், திமுக மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. டெல்டா, தென் மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி செல்வாக்கை பெற்றுள்ள திமுக, கொங்கு மண்டலத்திலும் கூடுதல் தொகுதிகளில் கைப்பற்ற ஸ்பெஷல் அசைன்மெண்ட்டை கையில் கொடுத்து செந்தில் பாலாஜியை களத்தில் இறக்கி தீவிரம் காட்டி வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிகட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனி மனிதராக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் பல இடங்களில் திமுக முந்துவதை அறிந்து, அந்த இடங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஊக்கமளித்து களத்தில் தளராமல் போராட அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்டது வந்த நிலையில், அங்கு செந்தில் பாலாஜி களமிறங்கிய பின், காலநிலவரம் அதிமுகவிற்கு சாதகமாக இல்லை கைநழுவி செல்கிறது என்று, எடப்பாடியிடம் எஸ்.பி.வேலுமணி முறையிட்துள்ளதாக கூறப்படுகிறது. பொறுமையாக கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலஜி எப்படி காய் நகத்துவார் என்றும், அவரது கணக்கு என்ன என்பது பற்றியும் எனக்கு தெரியும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தொகுதி வேலைகளை தீவிரமாக பாருங்கள் என்று கூறியதாக தெரிவிக்கின்றனர்.

அதேபோல தவெக சார்பில் விஜய் பிரச்சாரதில் ஈடுபட திட்டங்களை வகுத்து வருகிறார். டெல்லி மேலிடம் வரை திமுக மீது புகார் பட்டியலை வாசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூட்டணி இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான லோக்போல் நிறுவனம் தனது விரிவான கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் திமுக சுமார் 181 – 189 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அடுத்த முதல்வராக யார்.? வர வேண்டும் என்ற கருத்துக்கணிப்பும் எடுக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 41% வாக்குகளை பெற்று முதல்வர் ஸ்டாலின் முதலிடத்தில் இருக்கிறார்.
2வது இடத்தை 27.1% வாக்குகளை பெற்று தவெக விஜய் பிடித்திருக்கிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி 24.1% வாக்குகளை பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி விஜய் 2வது இடத்திற்கு வந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தவெக, முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், இளைஞர்கள் வாக்குகளை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8 முதல் 10 சீட்டுகள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் லோக்பால் நிறுவனம் தனது கருத்துக் கணிப்பில் தெரிவித்திருக்கிறது. அதேபோல் அதிமுகவை விட, தவெகவின் வாக்கு சதவிகிதம் சற்றே குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு செலுத்தும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில், திமுக கூட்டணி (DMK+): 40.1% வாக்குகள் பெற்று, 181 முதல் 189 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
அதிமுக கூட்டணி (ADMK+): 29% வாக்குகளுடன் 38 முதல் 42 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
தவெக (TVK): 23.9% வாக்குகளைப் பெற்று, 8 முதல் 10 தொகுதிகளைக் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
•நாம் தமிழர் கட்சி (NTK): 4.9% வாக்குகள் பெற வாய்ப்புள்ளது. வெற்றி பெரும் தொகுதிகள் எதுவும் இல்லை என்றும், லோக்போல் நிறுவனம் தனது கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் திமுகவின் தேர்தல் அறிக்கையை முழு வீச்சில் மக்கள் ஆதரிக்க தொடங்கி விட்டதாகவும், மு. க. ஸ்டாலினின் தீவிர பிரச்சாரம், பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக மீதான வெறுப்பு போன்ற காரணங்கள் திமுகவை களத்தில் முன்னிலை பெற வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

