கரூரில் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காவல்துறைதான் காரணம். காவல்துறையின் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதும் காவல்துறை மீதும் அதே குற்றச்சாட்டை வீசியிருக்கிறார்.
கரூர் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பங்களை சந்தித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கரூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்விளக்குகள் அணைக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
தவெக கூட்டம் நடைபெறும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தவெக இதற்கு முன்பு 4 மாவட்டத்தில் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள்.
மக்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அவர்களின் கூட்டத்துக்கு அரசும், காவல்துறையும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்திருக்க வேண்டும். இந்த கூட்டத்தில் முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.
தவெக-வுக்கு மட்டுமல்ல, நான் மேற்கொண்ட பிரசாரத்திலும், சரியாக காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டம் நடத்தும்போது, அவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் அத்தனை போராட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம். ஆனால், திமுக கூட்டம் நடத்தவே அனுமதி கொடுப்பதில்லை.நீதிமன்றத்துக்கு சென்று தான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. அப்படி நடத்தும்போதும் அரசாங்கம் முழுமையான பாதுகாப்பை வழங்குவதில்லை. பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.
அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டத்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். சொன்ன நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் வராதது முறையில்லை. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கடமையிலிருந்து போலீசார் தவறியதே உயிரிழப்புக்கு காரணம்” என்றார்.
மேலும், “தவெக கூட்டத்தில் திடீரென ஆம்புலன்ஸ் நுழைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த சம்பவத்தை நாம் அணுக வேண்டும்” என்றார்.