“நோய் நாடி,நோய் முதல் நாடி,அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”- என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நோய்களை கண்டறிவது மட்டுமன்றி, நோய்க்கான காரணங்களையும் கண்டறிந்து, அதை நீக்கும் பணியில் அரசு ஈடுபடுவதே மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் என்கிறார் மருத்துவர் மரு.வீ.புகழேந்தி. மேலும் அரசு மறுத்துவதுறையில் இருக்கும் குறைபாடுகள், அரசு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர் மரு.வீ.புகழேந்தி..
தமிழகத்தில் உள்ள மக்களின் குறிப்பாக,கிராமப்புற மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்,குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை ஆகஸ்ட் 2,2025ல் செயல்படுத்தியுள்ளது.
அதில் “உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு”-என்ற வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு அடிப்படை சுகாதாரத்தை வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தின் படி அரசின் கடமையாகும்.
ஒவ்வொரு வாரம், இயங்கும் சனிக்கிழமை அன்று 1256 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு,40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு,குறிப்பாக,கர்ப்பிணி பெண்கள்,தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்,மாற்றுத் திறனாளிகள்,குறைந்த வருமானத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டு,அவர்களுக்கு,சர்க்கரை நோய்,இரத்தக்கொதிப்பு,புற்றுநோய் போன்ற நோய்களைக் கண்டறிய தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2,2025ல் நடைபெற்ற முகாம்களில் 44,418 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கிராமப்புறங்களில் மக்களுக்கு அரசு சார்பாக சிகிச்சை அளிக்க துணைசுகாதார மையங்கள்,ஆரம்ப சுகாதார மையங்கள் அரசு சார்பில் சுகாதாரச் சேவைகளை இலவசமாக அளித்து வருகின்றன.
5,000-6,000 பேருக்கு 1 துணைசுகாதார மையம் இருக்க வேண்டும் என்பது விதி. தமிழகத்தில் 8,713 துணைசுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் மேலும் 642 துணைசுகாதார மையங்களை உருவாக்க(617 -கிராமப்புறம், 25-நகர்ப்புறம்)திட்டங்கள் இருந்தாலும், அதற்கான போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா.? என்பது கேள்வியாகவே உள்ளது.
மேலும் வழக்குகள் காரணமாக, துணைசுகாதார மைங்களில் 2013 (மொத்த இடங்கள்-8,713)செவிலியர்கள் (VHN) பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல்,காலியாக உள்ளது.
மேலும் பிரசவத்தின் போது உதவும் ANM பணியாளர்கள் பணியிடங்களிலும்,1,251 (மொத்தம்-2057 பணியிடகள்)நிரப்பப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார மையங்களிலும் 2,500 பணியிடங்கள்(40%) நிரப்பப்படாமல் உள்ளது.
சுகாதார காலி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையிலின்றி, நிரந்தர பணிகளாக இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
தமிழகத்தில் சிறப்பு குழந்தைப்பேறு மருத்துவர்கள் 2,000 பேராவது இருக்க வேண்டும் என்பது விதியாக இருக்க 850 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட 500 பேராசிரியர்,1,000 இணை-பேராசிரியர்,ஏறக்குறைய 1,000 துணை பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த,அதற்கான போதுமான நிதி ,உள்கட்டமைப்பு,ஆட்கள் வளத்தை மேம்படுத்த வேண்டும்.
குறிப்பாக கிராமப்புற, தாழ்த்தப்பட்ட மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த துணைசுகாதார மையங்களை மேம்படுத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும். மேலும் அவை ஒவ்வொரு நாளும் இயங்க திட்டங்கள் நடைமுறையில் இருந்தால் மட்டுமே நல்ல பலனை,சுகாதாரத்தை பயனாளிகள் பெற முடியும்.
ஆரம்ப சுகாதார மையங்களிலுள்ள காலி பணியிடங்கள் குறிப்பாக சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
“நோய் நாடி,நோய் முதல் நாடி,அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”-
குறிப்பிட்ட ஒரு இடத்தில் உள்ள மக்களுக்கு என்ன நோய்கள் உள்ளன என்பதை முதலில் அரசு கண்டறிந்து அதை பட்டியலிட வேண்டும்.
பின் அதற்கான காரணங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
பின், அந்நோய்கள் வராமல் தடுக்க மக்கள் பங்களிப்போடு அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறிந்து அதற்கான செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்தினால் மட்டுமே சிறந்த பலன் கிடைக்கும்.
தமிழகத்தில் மண்,நிலம்,காற்று,நீர்,உணவு ஆகியவற்றில் மாசுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில்,அதனால் நோய்கள் பெருகி வரும் சூழலில்,நோய்க்கான காரணங்களை கண்டறிந்து,அதைக் களைய,அய்யன் திருவள்ளுவர் வலியுறுத்துவது போல் செயல்திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்துவதே, அரசின் கடமையான, மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் சிறந்த வழிமுறையாக இருக்கும்.
நோய்களை கண்டறிவது மட்டுமன்றி,நோய்க்கான காரணங்களையும் கண்டறிந்து,அதை நீக்கும் பணியில் அரசு ஈடுபடுவதே மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும்.
அப்போது மட்டுமே இந்திய அளவில் தமிழக மக்களின் சுகாதாரம் முதலிடத்தில் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று கூறுகிறார்.