தமிழக கோவில்களில் நடைபெறும் புனரமைப்பு பணிகள், பக்தர்கள் வசதிக்கான கட்டமைப்புக்கள், நவீன வசதி போன்ற பெயர்களில் நடக்கும் பல்வேறு கட்டுமானங்கள் பக்தர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது. அறநிலையத்துறை பக்தர்களின் வசதிக்காக என்று கூறிக்கொண்டு, நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் பக்தர்களை மேலும் மேலும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.
இந்நிலையில் தான், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு ரூ.6 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்ட தமிழ்நாடு அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அரசாணையை கடந்த 2023-ம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்களில், ராஜகோபுரம் முன் வணிக வளாகம் அமைப்பது கோவில் விழாக்கள் மற்றும் பக்தர்களின் போக்குவரத்துக்கு இடையூறாக அமையும் எனத் முறையிடப்பட்டது.
இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 28) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வணிக வளாகத்துக்கான கட்டுமானங்களை மேற்கொள்ளப்போவதில்லை என அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கப்பட்டுவிட்டது. தற்போது, ராஜகோபுரம் முன்பு பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்த மாற்றுத் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என அறநிலையத்துறை கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாற்றுத் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். மேலும், அண்ணாமலையார் கோயிலில் இருந்து தொலைவில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளதா? என்று கண்டறிந்து அங்கு வணிக வளாகம் கட்டலாம் என்று நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.
அதேவேளையில், கோயிலுக்கு அருகில் உள்ள கோயில் நிலமாக இருந்தாலும், அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும், அங்கே எந்தக் கட்டுமானமும் கட்ட அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் உறுதியாகத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களைப் பராமரிக்கவும், பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தவும் திருப்பதி கோயிலில் இருப்பது போன்று தேவஸ்தானங்கள் அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இதுவென்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.