எடப்பாடி பழனிச்சாமியின் தனது தேர்தல் பரப்புரையின் பொது கூட்டத்தை கலைக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேண்டுமென்றே கூட்டத்திற்குள் அனுப்பப்படுவதாகவும் இனி ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் வந்தால் ஆம்புலன்ஸ் டிரைவர் அதே ஆம்புலன்சில் பேஷண்ட்டாக அனுப்பப்படுவார் என்று மிரட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் அதிமுகவினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 18 ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார், அப்போது, கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் ஒன்று புகுந்தது. அப்போது, ஆத்திரம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, தனது பரப்புரையை இடையூறு செய்ய, திமுக அரசு, அவசர ஊர்தியை ஏவி விடுவதாக குற்றம்சாட்டினார். அப்போதே ஆம்புலன்ஸை தாக்க அதிமுகவினர் சில முற்பட்ட போது, ஓட்டுநரை மிரட்டும் தொணியில், இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அதே ஆம்புலன்சில் பேஷண்டாக அனுப்பப்படுவார் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், திருச்சி துறையூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, தொண்டர்கள் குவிந்திருந்த போது, கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தது. இதனால் ஆவேசமடைந்த அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர்.
திருச்சி துறையூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, சாலையில் அதிமுக தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், அந்த வழியாக கூட்டத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்தது. அதனை தடுத்து நிறுத்திய அதிமுகவினர், ஆம்புலன்ஸின் பின்பக்க கதவை திறந்து பார்த்து உள்ளே நோயாளி இல்லாததை உறுதி செய்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸை சேதப்படுத்திய அதிமுகவினர், ஓட்டுநரையும் தாக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, காயமடைந்த ஓட்டுநர் செந்தில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிமுக கூட்டத்திற்குள் ஒருவர் மயங்கி விழுந்ததாக அழைப்பு வந்ததால் அங்கே சென்றதாகவும், தன்னை மட்டுமல்லாது, 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் ஆம்புலன்ஸ் உதவியாளரையும், அதிமுகவினர் தாக்கியதாக ஓட்டுநர் செந்தில்குமார் கூறியுள்ளார்.
வேண்டுமென்றே ஆம்புலன்ஸ்களை அனுப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி ஆம்புலன்ஸ் டிரைவர்களை ஏற்கனவே மிரட்டியிருந்த நிலையில், தற்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், பெண் உதவியாளரும் தாக்கப்பட்டது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆம்புலன்ஸை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த துறையூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாம்ய்யின் மிரட்டல் தொடர்பாக, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்கத்தினர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 5 பேர் மீது காவல்துறையிடம் நடவடிக்கை கோரி புகாரளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts
Click to comment