எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் இளங்கோவன் உட்பட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது ED விசாரணை கோரி வழக்கு | உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனு


அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, தி.மு.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

இந்த ஊழல் முறைகேடுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதற்கான முகாந்திரம் இருப்பதால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன் உள்ளிட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது சாலைப் பணிகள், எல்.இ.டி விளக்குகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும், மற்ற அமைச்சர்கள் தங்கள் வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (FIR) விவரங்கள் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட குற்றத்திற்காக லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற அமைப்புகள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிவிட்டாலே, அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது மனுதாரரின் வாதமாக உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி, இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதால், அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறைக்கு முறையான புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் அமலாக்கத்துறையின் தலையீடு அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்த மனு, விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


banner

Related posts

நடிகர் ரோபோ சங்கர் மரணம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்

Ambalam News

பாஜகவால் கழட்டி விடப்பட்ட ஒபிஎஸ்.. பின்னனியில் எடப்பாடி பழனிச்சாமி.?

Admin

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி காலமானார்

Ambalam News

Leave a Comment