தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதி திருச்சியில் முதல் மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரத்தை தொடங்க உள்ளார். தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கும்படி, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் அளித்தாகவும், தவெகவின் சார்பில் அனுமதி கேட்கப்பட்ட இடம் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடமாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 21 ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இந்த மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.
சுற்றுப்பயண விவரங்கள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விஜய்யின் பிரசாரத்திற்காக, சொகுசு வசதிகளுடன் கூடிய பேருந்து தயார் நிலையில், பனையூர் கட்சி தலைமை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வரும் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது முதல் சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான், தவெக தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பிரசார பயணத்தை வரும் 13 ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து துவங்க திட்டமிட்டுள்ளதாக தவெக முக்கிய நிர்வாகிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், அங்கு விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சத்திரம் பேருந்து நிலையத்தில் பேச காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதாலும், பேருந்து நிலையம் அருகில் இருப்பதாலும் இங்கு விஜய் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், குன்னம், பெரம்பலூர் தொகுதிகளில் பிரசாரத்திற்கு திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணத்தின், தொடக்கம் திருச்சியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற அவர்களுடைய திட்டத்தில் மாற்றங்கள் எதுவும் இல்லை. காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் வேறு இடத்தை தேர்வு செய்த பின்னர், அனுமதி கோரி மீண்டும் தவெக சார்பில் கடிதம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Related posts
Click to comment