சமூகத்தில் சாதிய மோதல்கள் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அரசு இயந்திரம் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதும் சட்டங்களை கொண்டு வருவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அரசு இயந்திரத்தின் அச்சாணிகளாக இருக்கும் அதிகாரிகளே சாதி மாத ரீதியாக பிளவுபட்டு நின்று கொண்டிருக்கிறார்கள். உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் தனக்கு கீழே இருக்கும் அதிகாரிகள் தன் சாதியை சேர்ந்த அதிகாரிகளாக இருக்கவேண்டும் என்று எண்ணுவதும், அதற்காக முழு முயற்சி எடுத்து பணியிட மாறுதலில் தான் சாதி அதிகாரிகளை கொண்டு வருவதும், மாற்றுசாதி அதிகாரிகளுடன் முரண்டுபிடிப்பதும், அவர்களுக்கு நிர்வாக ரீதியாக தொல்லை கொடுப்பதும், நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மதம் மற்றும் ஜாதிய ரீதியில் முடிவெடுக்கக்கூடாது, செயல்படக்கூடாது என்பது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பொதுவான விதியாகும். ஆனால் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட சாதி மதம் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம். சாதி மாத மோதல்களை களைய வேண்டிய அதிகாரிகளே சாதிய பாகுபாட்டுடன் செயல்படுகிறார்கள் என்றால் இவர்களிடத்திலே எவ்வாறு நிதியை எதிபார்க்க முடியும்.
இந்நிலையில் தான், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் அதிகாரிகளின் இந்த சாதிய போக்கை அம்பலப்படுத்தி கண்டித்திருக்கிறார்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி ஆணவக் கொலைகள் மற்றும் அதற்கு அரசு நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதும், பின்னர் அளித்த பேட்டியும், தமிழகத்தின் சமூக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களை சாதியக் கொடுமைகள் அதிகம் நடக்கும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க, அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அரசின் உயர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சாதியப் பாகுபாடு தலைதூக்கி நிற்பதாக அவர் சுட்டிக்காட்டினார். நெல்லையில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், காவல்துறை, ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சாதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்களை நடத்துவதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். இது, சமூகத்தில் பிளவுகளை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் கோரினார்.
எஸ்.சி, எஸ்.டி ஆணையக் கூட்டங்கள் முதலமைச்சர் தலைமையில் மட்டுமே நடத்தப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடக்க வேண்டிய மாதாந்திர வன்கொடுமை தடுப்புக் குழு கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் அவர் கூறினார். இந்தக் கூட்டங்கள் நடைபெறாததே பல சாதியக் கொலைகளுக்கு வழி வகுப்பதாகக் குறிப்பிட்டார்.
காதலர்கள் பாதுகாப்புக்காக காவல்துறை அல்லது பா.ஜ.க. அலுவலகங்களை நாட வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். காவல்துறையினர் பெரும்பாலும் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், பா.ஜ.க. அலுவலகத்திற்குச் சென்றால் பெற்றோரை அழைத்து பிரித்து விடுவார்கள் என்றும் கூறினார். ஆனால், தங்கள் கட்சியின் அலுவலகங்களில் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வமாக உதவுவதாகத் தெரிவித்தார்.
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு உடனடியாகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது, எந்தச் சாதிக்கும் ஆதரவான சட்டம் அல்ல என்றும், எந்தச் சாதியில் படுகொலை நடந்தாலும் அது தடுக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
சமீபத்தில் கேரளாவில், ஹிந்து ஐ.ஏ,எஸ். அதிகாரிகள் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவை தொடங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் அந்த குழுவிற்கு அட்மினாகவும் இருப்பதாக கண்டறிந்த கேரளா அரசு விசாரணைக்கு பிறகு ஐ.ஏ,எஸ். அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் என்.பிரசாந்த் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது குறிப்பிடதக்கது.
ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும்நிலையில், தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்னையில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து, அதிகாரிகளின் செயல்பாட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Related posts
Click to comment