மதுரை தவெக மாநாட்டில் நடிகர் விஜய் மோடி குறித்து விமர்சித்து, தமிழக மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று பேசினார். இந்த பேச்சு இலங்கை வரை எதிரொளித்திருக்கிறது. விஜய்யின் பேச்சுக்கு இலங்கை அமைச்சர் ஒருவர் பதிலளித்து பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும் வாய்க்கொழுப்பெடுத்த அந்த அமைச்சர், தமிழகத்தில் தேர்தல் சமயங்களில் கச்சத்தீவு மீட்பு பிரச்னை தமிழக அரசியல் கட்சி தலைவர்களால் அரசியல் ஆதாயத்திற்காக எழுபப்படும் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதன் வாயிலாக இந்திய அரசியலையும் கச்சத்தீவு பிரச்னையையும் அவர் கொச்சைப்படுத்தியிருப்பது உஷ்ணத்தை கிளப்பியிருக்கிறது.
நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் வங்கக் கடலில் காலங் காலமாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கச்சத்தீவு இந்திராகாந்தியால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டபின், இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களை இம்சித்து வருகிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக அபாண்ட பழி சுமத்தி கைது செய்து சிறையில் அடைப்பதுடன், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அவற்றை நாசமாக்கி வருகின்றனர். இந்த பிரச்சனைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படை நம் மீனவர்களை கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது, அவர்களை தாக்குவது என அட்டூழியம் செய்து வருகிறது. இந்த அராஜகத்தால் பல தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடி வருகிறார்கள். மீனவர்கள் தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகள் கச்சத்தீவு பிரச்னை குறித்து கோரிக்கைகளை வைத்து வந்த நிலையில்,தவெக மதுரை மாநாட்டில் அக்கட்சியின் தலைவர், விஜய் “தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக தாக்குதல்களை சந்தித்து வருகிறார்கள். மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக, கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத் தர வேண்டும் என பேசியிருந்தார்.
கச்சத்தீவை யார் தாரைவார்த்தார்கள்.? என்ற வரலாறு தெரியாமல் விஜய் பேசுகிறார் என பாஜகவினர் விஜய்யை விமர்சித்தனர். இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களை அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜத ஹேரத் சந்தித்தார்.
அப்போது, “கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு. இதை ஒரு போதும் இந்தியாவுக்கு தர மாட்டோம். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இதனால் தேர்தல் மேடைகளில் பல்வேறு கட்சிகள் தங்கள் வாக்குகளை பெற நடக்காத விஷயங்களை கூறுவார்கள். கச்சத்தீவை மீட்போம் என அந்த அரசியல் கட்சிகள் கூறுவது இது முதல்முறையல்ல. இது போல் பலமுறை பேசியுள்ளனர். தேர்தல் மேடைகளில் கூறுவதால் எதுவும் மாறிவிடாது. கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் ஒரு மேடையில் பேசியதை பார்த்தேன். அதனை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எப்போதுமே கச்சத்தீவு இலங்கைக்குத்தான் சொந்தம். எப்போதும் இந்தியாவுக்கு அதை வழங்க மாட்டோம். இந்திய அரசு தரப்பில் யாராவது இது குறித்து கருத்து தெரிவித்தால் அப்போது பார்க்கலாம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழக அரசியல் கட்சிகளுக்கு கச்சத்தீவு பிரச்னை என்பது ஒரு அரசியல் ஆதாயத்திற்கான பிரச்னை என்கிற ரீதியில் பதிலளித்து சென்றுள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்னை மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை கேலிக்கூத்தாக்கும் வகையில் பேசிய இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தான் பதிலளிக்க வேண்டும்.
Related posts
Click to comment