ஊழலற்ற வெளிப்படைத் தன்மையான ஆட்சி.? ஆனால் ஊழல்வாதிகளை தாங்கிப் பிடிப்போம்..
”ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம்” ”சிறுவாணி தண்ணீரைப்போல தெளிவான ஆட்சியை வழங்குவோம்” என்ற முழக்கத்தோடு பிரச்சாரத்தை ஆரம்பித்த தவெக விஜய், முதமைச்சர் விஜய்யாக பதவியில் அமர்ந்து, ”மக்கள் பணத்தை தொட மாட்டோம்” ” தொடவும் விட மாட்டோம்,” ”இதற்கு முன்பு தொட்டவங்களையும் விட மாட்டோம்” என்று சட்டசபையில் முழங்கினார்.

ஆனால் இவை அனைத்திற்கும் மாறாக, அதிமுகவில் அமைச்சராக இருந்த குட்கா ஊழல் புகழ் சி.விஜயபாஸ்கரை எப்படி கட்சியில் சேர்த்துக் கொண்டார். அவரைப் பற்றி அறியாதவரா.? என்ற கேள்வி எழுகிறது. ஊழலுக்கு எதிராக கட்சி/ஆட்சி நடத்துகிறாரா.? இல்லை ஊழல்வாதிகளை புனிதப்படுத்த கட்சி நடத்துகிறாரா.?அடுத்ததாக இணையவிருக்கும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர். இவர்கள் எப்படி முதல்வர் விஜய்க்கு உத்தமானானார்கள் என்பதுதான் தெரியவில்லை. இவர்கள் மக்கள் பணத்தை தொடவில்லையா.? என்ற கேள்வி யதார்த்தமாக எழுகிறது.
எம். ஆர். விஜயபாஸ்கர்

தற்போது கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்து தவெகவில் இணைய காத்திருக்கிறார். இந்த எம். ஆர். விஜயபாஸ்கர் சாதாரமானவர் இல்லை. அதிமுக ஆட்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொத்துக்குவிப்பு வழக்கு,
கரூரில் 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து, மிரட்டி அபகரித்துக் கொண்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆள் கடத்தல், தாக்குதல், கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் தயாரித்தல் என 31 வழக்குகளுக்கு சொந்தக்காரர் தன் இந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
“மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டோம். தொடவும் விட மாட்டோம். தொட்டால் விடமாட்டோம். இதற்கு முன்னால் தொட்டவர்களையும் விடமாட்டோம்” என சில நாட்கள் முன்புதான் முதல்வர் விஜய் பேசினார். இதில் எது உண்மை என்பதை முதல்வர் விஜய் விளக்க வேண்டும். ஒருவேளை தன் கட்சியில் இணைத்துக் கொண்டு அவர் மீதான வழக்குகளை விசாரித்து தண்டனை தரப்போகிராரோ.? இல்லை தவெக பிரச்சாரத்தில் கரூரில் 41 பேர் மாண்டுபோன விவகாரத்திற்கு முட்டுக் கொடுக்க விஜய்கு விஜயபாஸ்கர் தேவைப்படுகிறாரா.? என்று தெரியவில்லை. அவரின் நோக்கம் என்ன என்பதை பார்ப்போம்.
அதிமுகவை காலி செய்யும் தவெகவின் அஜெண்டா -”மற்றும் பலர்” மகத்தான பலராக மாறிய கதை.
பிரச்சாரங்களில் அதிமுக என்ற பெயரைக் கூட கூறமாட்டார். ” மற்றும் பலர் ‘ என்று தான் குறிப்பிடுவார். அவரைப் பொறுத்தவரை அந்தளவுக்கு அதிமுக மோசமான கட்சி. ஆனால் அப்படிபட்ட கட்சியின் ஊழல் நிர்வாகிகள் புனிதர்கள். அவர்களை தன்னுடன் இணைத்துக் கொள்வார். இதுதான் அவருடைய நேர்மையான வெளிப்படையான அரசியல். அதிமுக என்ற கட்சியே இருக்கக்கூடாது. இதைத்தான் அவர் பிரச்சாரங்களில் தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று மறைமுகமாக கூறினார். அதிமுகவை வெகு சுலபமாக உடைத்துவிட முடியும் என்று நம்ப வைத்திருந்தார். கே.ஏ.செங்கோட்டையன். அதன் வெளிப்பாடாகவே அவரது பிரச்சாரப் பேச்சுகள் அமைந்திருந்தது.

தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைத்த நிலையில், அதிமுக புள்ளிகளை வெகு சுலபமாக தன் பக்கம் இழுத்துவிட்ட முடியும் என்பதை உறுதியாக நம்பத் தொடங்கினார். அதிமுகவை உடைத்து அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக கருதப்படும் முன்னான் இந்நாள் அமைச்சர்களை தவெக பக்கம் இழுக்கும் குதிரைபேர சோபா மாடல் அஜெண்டாவை தொடங்கிவிட்டார்.
அதிமுகவில் உச்சமடைந்த உட்கட்சி பூசல் – பின்னணியில் தவெக
விஜய் ஆட்சி அமைத்துவிட்ட நிலையில், அதிமுகவில் புகைந்து கொண்டிருந்த உட்கட்சி பூசல் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. அதிமுக முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் தவெக தொடர்ந்து திரைமறைவில் காய் நகர்த்தி வந்தது.
இதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தலைமையிலான ஒரு தரப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மீறி, வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டரீதியான சட்டமன்ற நடவடிக்கைகளால் தவெக பின்னால் ஓடியவர்கள் தாய்க்கழகம் திரும்பினர்.
இதை விரும்பாத தவெக தரப்பு மீண்டும் கொக்கி போட்ட ஆரம்பித்த சூழலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பெருந்துறை எஸ்.ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை குட்கா ஊழல் புகழ் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முதற்கட்டமாக தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். எம்.ஆர். விஜயபாஸ்கர் இணைப்பிற்காக காத்துக்கிடக்கிறார்.
தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் இருந்த மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் எடப்பாடி பழனிச்சாமியால் பறிக்கப்பட்டது. அந்த இடங்களில் எடப்பாடி தனது ஆதரவாளர்களை நியமித்தார் . அதேநேரத்தில், தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சில முன்னாள் அமைச்சர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக செயல்படத் தொடங்கினர்.
இதன் பின்னர் அவர்களை கட்சிக்குள் மீண்டும் ஏற்றுக்கொண்டாலும், முன்பு வகித்த முக்கிய பொறுப்புகள் உடனடியாக வழங்கப்படவில்லை. தற்போது சில முன்னாள் அமைச்சர்களுக்கு புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது. எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, கருப்பணன், கே.பி. அன்பழகன், காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆனால், இந்த நியமனங்கள் சிலருக்கு திருப்தி அளிக்கவில்லை. காரணம், அதிமுகவில் மாவட்டச் செயலாளர் பதவியே மிகுந்த அதிகாரம் கொண்டதாக கருதப்படுகிறது. அதிகாரம் மிக்க நிர்வாகப் பதவிகளில் இருந்தவர்களுக்கு கௌரவப் பதவியா என்ற முனுமுனுப்பு கிளம்பியுள்ளது.
இதனால், மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை இழந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீண்டும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினரை தவெக பக்கம் மீண்டும் திருப்ப பேரங்கள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதான் தவெகவின் தூய ஊழலற்ற வெளிப்படையான அரசியல்..மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் முட்டாள்கள் அல்ல. தவெகவின் அடுத்தடுத்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
-மு. ஆனந்த்

