திருத்தணி | வடமாநில தொழிலாளி மீது கஞ்சா போதை சிறுவர்கள் கொடூரத் தாக்குதல்.. அதிர்ச்சியில் உறைந்த தமிழகம் | காவல்துறைக்கு எதிராக கண்டனக்ககுரல்கள்.!!


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, வடமாநில புலம்பெயர் தொழிலாளிக்கு நேர்ந்த மிகக்கொடூரமான தாக்குதல் சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இன்ஸ்டாவில் பதிவிடும் நோக்கில் வடமாநில இளைஞரை கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் போதை சிறுவர்கள் வெட்டியுள்ளனர். அதை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியான நிலையில் அதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்ததோடு கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் பயணித்த வடமாநில புலம்பெயர் தொழிலாளியான சுராஜ் என்ற அந்த இளைஞர் மீது, திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஏறிய நான்கு சிறுவர்கள் (வயது 17) கஞ்சா போதையில் ஆயுதங்களை கழுத்தில் வைத்தும் வெட்டுவதைப்போல நடித்தும் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதனை எதிர்த்த வடமாநில இளைஞர் மீது கோபம் கொண்ட கஞ்சா போதை சிறுவர்கள் இளைஞரை ரயிலில் இருந்து இறக்கி, திருத்தணி ரயில் நிலையம் அருகே தனிமையான இடத்தில் அழைத்துச் சென்று அரிவாள் உள்ளிட்ட ஆயுங்களால் வெட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை அவர்களே வீடியோவாகப் பதிவு செய்து, கையால் வெற்றி சின்னம் காண்பித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இது அவர்களின் குரூர எண்ணத்தையும் போதை வெறியையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

இதைகண்ட பயணிகள் சிலர் அளித்த புகாரின் பேரில், அங்கு விரைந்த போலீசாரால், படுகாயமடைந்த புலம்பெயர் தொழிலாளியான அந்த இளைஞரை கவலைக்கிடமான நிலையில் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் வைரலான வீடியோக்களின் அடிப்படையில் நான்கு சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் பிரபல ரௌடியாக ஆக வேண்டும் என்ற ஆசையாலும், போதைப்பொருளின் கொடூர தாக்கத்திலும் இத்தகைய கொடூர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சிறுவர்களாக இருந்த போதிலும், கடுகளவும் அச்சமோ, ஈவு இரக்கமோ இன்றி நிகழ்த்திய இந்த கொடூர வன்முறை சட்டத்தின் முன் கடும் குற்றமாகும். சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் இருந்தாலும், இத்தகைய கொலைவெறித் தாக்குதலுக்கு உரிய கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் பொதுமக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களிடையே பரவுவதைத் தடுக்கவும், சமூக வலைதளங்களில் வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சென்னை போன்ற இடங்களில் ரயில் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான இதுபோன்ற ரீல்ஸ் மோக நடவடிக்கைகளும், சாகச நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஆகவே, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், இதுபோன்ற குற்றங்களை தடுக்கவும் ரயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளியான சுராஜிற்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதோடு, உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசையும், காவல்துறையை வலியுறுத்தி வருகின்றனர்.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.சிறுவர்களால் நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு பெரிய தண்டனைகள் வழங்க முடியாது என்பதை தெளிவாக அறிந்தே இவர்களை போன்ற சிறுவர்கள் இதுபோன்ற குற்றங்களில் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர். சட்டத்தில் உரிய மாற்றங்களை செய்து வயது வரம்பை தளர்த்தி இது போன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் பின்னணியை விசாரிப்பதோடு, இவர்கள் எவ்வளவு நாட்களாக போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். எங்கிருந்து போதைப்பொருள் கிடைக்கிறது. என்பதை விசாரிக்க தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் இது போன்ற ஊதாரி சிறுவர்களின் நடவடிக்கையை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த சிறுவர்களின் இன்ஸ்டா ஐடியில் கஞ்சா அடிப்பது, மது அருந்துவது போன்ற வீடியோக்கள் அப்லோடு செய்யப்பத்திருக்கிறது. இது குறித்து முறையான விசாரணை தேவை என்ற குரலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது.

சிறுவர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் கஞ்சா போதை மாத்திரைகள் போன்றவற்றின் நடமாட்டம் தமிழகத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. சமூக ஊடகங்களில் போலீசார் மீது அதிருப்தி அலை வீசுகிறது.

இந்த சம்பவத்தால் தமிழக காவல்துறைக்கு மட்டும் தலைகுனிவு இல்லை. ஆளும் திமுக அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய தலைகுனிவு. முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா.?


banner

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு..

Ambalam News

புதுச்சேரியில் ரங்கசாமியுடன் தவெக கூட்டணி என்று வதந்தி – புஸ்லி ஆனந்த் அறிக்கை

Ambalam News

சிறுமிக்கு பாலியல் தொல்லை | தாளாளர் மனைவியுடன் கைது.. தனியார் காப்பகத்தில் பகீர்..

Ambalam News

Leave a Comment