மதுரை மாவட்டம் தெற்கு தாலுகா, குசவபட்டி கிராமத்தில் கிரஷர் குவாரி வைப்பதற்காக அனுமதி கோரி மதுரை சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த ரத்னம் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து வருவாய்த்துறை மற்றும், நில அளவை, கனிமவளத்துறை அதிகாரிகளின் நேரடி கள ஆய்வு முடிவடைந்த நிலையில், கிரஷர் குவாரிக்காக அனுமதி கிடைக்க தாமதமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரத்னம் கிரஷர் குவாரிக்கான அனுமதி வழங்குவது ஏன் தாமதமாகிறது என்று மதுரை தெற்கு வட்டாச்சியர் ராஜபாண்டியிடம் கேட்டபோது, ராஜபாண்டி 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் குறைந்தபட்சம் 70 ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும் என ரத்தினத்திடம் பேரம் பேசியுள்ளார்.
இதையடுத்து வட்டாச்சியர் லஞ்சம் கேட்பது குறித்து ரத்தினம் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரத்தினத்திடம் 70 ஆயிரம் ரூபாய் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி, பின் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புதுறையின் அறிவுறுத்தலை தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் வட்டாச்சியர் ரத்னம் அலுவலகத்தில் இல்லாத நிலையில், அவரை தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.
அப்போது, மாலை பணத்துடன் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வருமாறு வட்டாட்சியர் ராஜபாண்டி கூறியிருக்கிறார். மீண்டும் மாலை 6 மணியளவில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு சென்ற ரத்னம் ரசாயனம் தடவியே 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டாட்சியரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது இந்த பணத்தை தனது ஓட்டுநரிடம் வழங்குமாறு வட்டாட்சியர் கூறிய நிலையில், ஓட்டுநரிடம் ரத்தினம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது பின்னால் இருந்து கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான காவல்துறையினர் ஓட்டுநர் ராம்கி மற்றும் தெற்கு வட்டாட்சியர் ராஜபாண்டி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். இதனையடுத்து வட்டாட்சியர் ராஜபாண்டி மற்றும் ராம்கி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில், உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வட்டாட்சியரை லஞ்சம் பெற்றதாக கையும் களவுமாக கைது செய்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.