காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 381 ஏரிகளில், கரை மற்றும் நீர்ப்பிடிப்பு அல்லாத விளை நிலங்கள் உள்ளன. இது போன்ற ஏரிகளில், விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ளுவது மற்றும் சாலை விரிவாக்க பணிக்கு சவுடு மண் அள்ளுவதற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், அளவுக்கு அதிகமாக ஏரியில் பள்ளம் தோண்டி, மண்ணை அள்ளி வருகின்றனர். இதனால், ஆங்காங்கே மரண பள்ளங்கள் ஏற்பட்டு, மழைக்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் தாலுகா ஆண்டி சிறுவள்ளூர் கிராமம் மற்றும் வாலாஜாபாத் தாலுகா நத்தாநல்லுார் கிராம ஏரி பகுதிகளில், மண்ணை அள்ளி வருகின்றனர். பொதுவாக, எந்த ஏரியில் மண்ணை அள்ளினாலும், ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மண்ணை அள்ள வேண்டும். அதாவது, 4 அடி ஆழம் வரை மண்ணை அள்ளலாம். ஆனால் ஒப்பந்ததாரர்கள், கொக்லைன் இயந்திரம் மூலம் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, மண் எடுத்து வருகின்றனர். அதை லாரிகளில் ஏற்றி, பல இடங்களுக்கு விற்றும் வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய நீர்வளத் துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுப்பாரா.?
-நாகராஜன்