சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு காவலர்கள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்ட கொலை வழக்கு கைதிகள் கஞ்சா கடத்தும் நோக்கில், காவல் துறையினரைத் தகாத வார்த்தைகளால் பேசி, கலவரத்தில் ஈடுபட்ட மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு காவலர்கள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்ட கொலை வழக்குக் விசாரணை கைதிகள் காவல் துறையினரைத் தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டிய தாக்குதல் நடத்த முற்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே காவல் வாகனத்திற்குள் இந்தச் சம்பவம் நடந்தேறியது. இந்தக் காட்சிகளில், விசாரணைக் கைதிகள் காவல் துறை வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்துவதும் பதிவாகியுள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் 26 பேரை போலீஸ் பஸ்சில் ஏற்றி, எழும்பூர் நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் போலீசார் அழைத்து வந்தனர். கைதிகள் அழைத்து வரப்பட்ட போலீஸ் பஸ்சை, நவீன்குமார் என்ற போலீஸ்காரர் ஓட்டி வந்தார். இவர்களுக்கு பாதுகாப்புக்காக செந்தில், பாபு, சங்கர் என்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சுமார் 30 போலீசார், மற்றொரு போலீஸ் வாகனத்தில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

அழைத்து வரப்பட்ட கைதிகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்து, இரவு 8 மணியளவில், கைதிகள் ஏற்றப்பட்ட பேருந்து மீண்டும் புழல் சிறை நோக்கி புறப்பட்டுச் சென்றது. பாதுகாப்பு போலீசாரும் கைதிகள் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். கைதிகள் அனைவரும், போகும் வழியில் ஒரே ஆட்டம்பாட்டத்துடன் அமர்க்களமாக சென்றனர். கைதிகளை ஏற்றி வந்த பேருந்து, வியாசர்பாடி பகுதியில் செல்லும்போது, கைதிகள் திடீரென பேருந்தின் பக்கவாட்டில் அடித்தப்படி ரகளையில் ஈடுபட்டனர். உடனே பேருந்தை ஓட்டிச் சென்ற போலீஸ்காரர் சாலையோரமாக நிறுத்தினார்.
அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 2 மர்ம நபர்கள் கைதிகள் இருந்த பேருந்துக்குள் கஞ்சா பொட்டலங்களை வீசியுள்ளனர். இதை கண்ட போலீசார், கஞ்சா பொட்டலங்களை கைப்பற்ற முயற்சித்துள்ளனர். கஞ்சா போட்டலங்களை மறைக்க கைதிகள், பெரிய கலவர நாடகத்தை நடத்தியுள்ளனர். போலீசாருடன் கைதிகள் வாக்குவாதம் செய்து, ஆபாசமாக திட்டி போலீசாரை தாக்கியுள்ளனர். கைதிகள் தங்கள் வந்த பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். கைதிகள் நடத்திய இந்த கலவரத்தை பார்த்ததும் பொதுமக்கள் திரண்டனர். பின்னர், கைதிகளை போலீசார் சமாதானப்படுத்தி அழைத்து சென்றுவிட்டனர்.

கலவர அட்டகாசத்தை தொடர்ந்து, யோகராஜ், விவேக் என்கிற குள்ளா, சங்கர் என்கிற சங்கர் பாய் மற்றும் நெப்போலியன் ஆகிய 4 குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக, எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, 4 கைதிகள் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யோகராஜ், விவேக் என்கிற குள்ளா, சங்கர் என்கிற சங்கர் பாய் மற்றும் நெப்போலியன் ஆகிய 4 பேரும், 2025 பிப்ரவரி 27 அன்று அண்ணா நகர் அன்னை சத்யா நகரில் 28 வயதான ரவுடி ராபர்ட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்
ரவுடி ராபர்ட் கொலை சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் “ராபர்ட் மட்டை 100%” என்று வீடியோவைப் பதிவிட்டது கெத்து காட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ பொதுமக்களிடையே அப்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.