தனிப்படைகளை கலைக்க.? போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது கடுமையாக தாக்கி போலீசார் கொலை செய்தனர். இதனை அடுத்து தமிழகத்தில் காவல்துறைக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் கண்டனக்குரல்கள் எதிரொலித்து வருகின்றன.
காவலாளி அஜீத்குமார் வயதான பெண்மணியை வீல் சேரில் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்து அழைத்து வர விதிமுறைகளை மீறி ரூபாய் 500 கேட்டிருக்கிறார். இதையடுத்து அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் நடந்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து காவலாளி அஜீத்குமாரை பழிவாங்கும் விதமாக அவர்மீது பொய் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக கோவிலை சுற்றியுள்ள சம்பவத்தை நேரில் கண்ட சிலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். புகாரளித்தவருக்கு ஆதரவாக தலைமை செயலகத்தில் முகிக்கியப்பொருப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதயடுத்து நடந்த கொடூரமான விசாரணையில் அஜீத்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அஜித்குமாரை தாக்கிய மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படைக் காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காவல்துறைக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்தும் மதுரை உயர்நீதி மன்றதிடம் இருந்து எழுந்த கண்டனக்குரல்களை அடுத்து தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜூவால் தமிழகத்தில் காவல் நிலையங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜூவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, குற்றப்பிரிவு தனிப்படையை இயக்கியது யார்.? அஜித்குமாரை இப்படி தாக்குவதற்கு சிறப்புப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.? யார் அதிகாரம் கொடுத்தது.? என்று காட்டமாக கேள்வி எழுப்பிய நிலையில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், எஸ்.பி. அந்தஸ்துக்கும் மேல் உள்ள அதிகாரிகளுடன் ஜூம் மீட்டிங் மூலம் ஜூலை 2 தேதியான நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, “தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி., டிஎஸ்பி, காவல்நிலைய இன்ஸ்பெக்டர் என காவல்துறையில் அதிகாரிகளுக்கு கீழ் இயங்கும் தனிப்படைகளைக் உடனடியாக கலைக்க வேண்டும். குற்றசம்பவங்கள் நடைபெறும் போது வழக்கின் தன்மைக்கு ஏற்ப தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும்
எந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்தாலும் 35b நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளை தவிர்த்து எந்தவிதமான தனிப்படைகளும் செயல்படக்கூடாது. உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலை தொடர்ந்து முக்கியமான வழக்குகளுக்கு மட்டுமே சிறப்புப் பிரிவு அமைக்க வேண்டும். அந்த வழக்கு முடிந்ததும் தனிப்படையை உடனே கலைத்துவிட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
வழக்குகளில் எல்லோரையும் விசாரணைக்கு அழைத்து வரக் கூடாது. மிக மிக முக்கிய வழக்கு குற்றவாளியாக இருந்தால் மட்டும் விசாரணைக்கு அழைத்து வர வேண்டும். தொடர்ந்து எந்த வழக்கு, யாரை அழைத்து வந்து விசாரணை செய்கிறீர்கள்? என்ற விவரங்களை மேல் அதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.
உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்த பிறகே விசாரிக்க வேண்டும். அடித்து துன்புறுத்தி விசாரிக்கக் கூடாது. குடிபோதையில் உள்ளவர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்லக் கூடாது. இரவு நேரங்களில் பெண்களை விசாரணை என்று காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது. போலீஸ் அதிகாரிகள் அன்றாடம் ரோந்து பணிகளுக்கு செல்ல வேண்டும். உதவி ஆணையர்கள், டிஎஸ்பி அந்தஸ்துள்ள அதிகாரிகள் அன்றாடம் காவல்நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். இனி இதுபோன்ற ஒரு கஸ்டடி மரணம் நடக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
காவல்துறையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனிப்படை அமைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் அந்த தனிப்படை வாயிலாகவே கல்லாக்கட்டி வருகின்றனர். தனிப்படை போலீஸாரின் அத்துமீறல்கள் தினமும் நடந்த வண்ணமே உள்ளது என்கின்றனர் விபரமறிந்த சமூக ஆர்வலர்கள்.
டிஜிபி சங்கர் ஜூவால் அவர்களின் உத்தரவை எந்த அளவுக்கு காவல்துறையினர் பின்பற்றுவார்கள் என்பதற்கு பதில் காலத்தின் கையில் தான் இருக்கிறது.