தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிகபடுகின்றன. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை நியாயவிலைக் கடைகளுக்கு சென்று வாங்க சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு, அவர்கள் சிரமப்படுவதை தடுக்கும் விதமாக அவர்களின் இல்லம் தேடிச்சென்று அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கும் விதமாக ‘’தாயுமானவர்’’ திட்டத்தை அறிவித்தார்.

இன்று சென்னையில், இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி, 35 ஆயிரம் நியாயவிலைக் கடைகள், மூலம் 70 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் முதியவர்கள், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயுமானவர் திட்டத்தின் வாயிலாக, மாதம்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் இல்லம் தேடி சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் இத்திட்டத்தின் வாயிலாக நியாயவிலைக்கடை ஊழியர்களும் கள்ளச்சந்தைகாரர்களும் சுலபமாக முறைகேடுகளில் ஈடுபடுவார்கள் என்ற கருத்தினை முன்வைக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடந்து நடைபெற்று வருகிறது. குடிமைப்பொருள் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அவ்வப்போது ரெய்டு செய்து ரேஷன் அரிசி கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர். இதேபோல, வருவாய்துறை அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருக்குன்றனர். இதுபோன்ற குற்றங்களை தடுக்க அரசு பல வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பயோமெட்ரிக் முறையை கொண்டு வந்த போதிலும்கூட, இந்த முறைகேடுகளை தடுக்க முடியவில்லை.

ரேசன்கடை ஊழியர்கள் பல தில்லுமுல்லுகளை செய்து ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்று வருகின்றனர். பல ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாயுமானவர் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க அரசு என்ன திட்டத்தை வைத்துள்ளது. என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.
ரேஷன் அரிசி பெரும்பாலும் கள்ளச் சந்தை வியாபாரத்திற்குத்தான் செல்கிறது. இதுபோன்ற திட்டங்களில் உண்மையான பயனாளிகளை கண்டறிவதும் பெரும் சிரமம். நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் இதர பொருட்கள் கடத்தப்படுவதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு கொஞ்சநஞ்சமல்ல. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை என்ற விமர்சனங்கள் காலம்காலமாக தொடர்கிறது.