தமிழகம் முழுவதும் உள்ள RTO அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக அவ்வப்போது பொதுமக்கள் புகார் வாசிப்பது தொடர்கதைதான். ஆனால் சில RTO அலுவலகங்களில் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி, முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர்கள், RTO வின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் டார்கெட் வைத்து பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில RTO அலுவலகங்களில் பணிபுரியும் சில அதிகாரிகள் அளவுக்கதிகமாக அட்டகாசம் செய்யும்போது, ‘’இந்த பூனைக்கு நாம் தான் மணி காட்ட வேண்டும்’’ என்ற மனநிலையில் யாரோ ஒருவர் லஞ்ச ஒழிப்புதுறை கதவை தட்டுவதும், புகாரளிப்பதும், தொடர்ந்து ஆதாரப்பூர்வமான புகார்களை அனுப்புவதுமாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும்போதுதான் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை களமிறங்குகிறது. சில இடங்களில் பொறி வைத்து பிடித்து கைது செய்கின்றனர். சில அலுவலகங்களில் திடீராய்வு மேற்கொண்டு கையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்கின்றனர்.

இப்படித்தான் திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச விவகாரம் தலைவிரித்து ஆடியிருக்கிறது. இங்கு வட்டார போக்குவரத்து அலுவலராக (RTO) பணிபுரியும் நடராஜன் , முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா இருவரும் தங்களுக்கு லஞ்சம் வசூலித்து கொடுப்பதற்கு புரோக்கர்களை நியமித்து பொதுமக்களிடமும் மோட்டார் வாகன விற்பனை நிறுவனங்களிடமும் அதிக அளவில் லஞ்சதொகையை வசூலித்து ஊழல் தாண்டவம் ஆடியிருக்கின்றனர். ஆட்டோ, டூவீலர், கார், கன்சல்டிங் டீலர்களுடன் அதிக அளவில் லஞ்சம் கேட்டு மோதல் போக்கை கடைபிடித்து வந்திருக்கின்றனர்.
குறிப்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா குறிப்பிடும் லஞ்ச தொகையை கொடுக்கவில்லையெனில், அலைக்கழித்து விடுவாராம். இதனால் கன்சல்டன்ட்கள் ஏககடுப்பில் இருந்துள்ளனர். பலமுறை வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் விமலாவிற்கு ஆல்இன்ஆல் அழகு ராஜாவாக வலம் வரும் தமிழ் என்பவர்தான் ஒவ்வொரு வேளைக்கும் ரேட் பிக்ஸ் செய்வாராம். அந்த தொகையை மற்ற புரோக்கர்கள் வசூலித்து தரவேண்டுமாம். அலுவலகத்தில் விமலாவின் இருக்கையில் அமர்ந்து அவருக்கான வேலைகளை செய்வதும் இவர்தானாம். துறையில் வேறு அலுவலக பணியில் இருப்பவர் ஒத்தாசையாக இருக்கிறார் என்று பொதுமக்கள் நினைத்திருந்த வேளையில், 9.06.2025 அன்று தான் அவரைப்பற்றிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. விமலாவுக்காக அவரது இருக்கையில் அமர்ந்து அவருடைய வேலைகளை செய்து வருவதும், வாகனங்களுக்கு FC கொடுப்பதும் வட்டாரப்போக்குவரது துறை சார்ந்த நபர் இல்லை அவர் மாயவரத்தில் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி நடத்தி வரும் ஒருவரின் சகோதரர் என்பது தெரியவந்துள்ளது. துறைக்கு சம்மந்தமில்லாத ஒருவரை தனது இருக்கையில் அமரும் அளவுக்கு அனுமதித்து இருக்கிறார் என்றால், விமலாவின் அடாவடித்தனம் எப்படிப்பட்டதாக இருக்குமென்பதை புரிந்து கொள்ளுங்கள் என்கின்றனர் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள்.
இவற்றையெல்லாம் களையெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் RTO பண அறுவடை செய்யும் வேளைகளில் மூழ்கிகிடக்கிறார். அதே அலுவலகத்தின் முதல் தளத்தில் தான் வட்டாரப்போக்குவரத்து துறையின் போக்குவரத்து துணை ஆணையர் (DTC) அலுவலகம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல புகார்கள் எழுந்த நிலையில் தான், RTO நடராஜன் சேதுராஜ் என்ற இடைத்தரகர் மூலமாக லஞ்சம் பெருவதாகவும், முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா பாப்புலர் டிரைவிங் ஸ்கூலில் பணிபுரியும் ரமேஷ் என்ற இடைத்தரகர் மூலமாக லஞ்சப்பணத்தை வசூல் செய்து வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் கடந்த 29.07.2025 அன்று மாலை சரியாக 13.15 மணியளவில் ஊழல் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் அ.பிரசன்ன வெங்கடேஷ் தலைமையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சி மேற்கு வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திடீர் சோதனையின் போது, அலுவலகத்திற்குள் RTO நடராஜனின் புரோக்கர் சோமரசன்பேட்டையை சேர்ந்த சேதுராஜ் RTO நடராஜனுக்கு கொடுக்க பொதுமக்களிடம் கூடுதலாக வசூல் செய்து வைத்திருந்த லஞ்சப்பணம் சுமார் 31000 ரூபாயோடு சிக்கினார். இதுமட்டுமன்றி, RTO வின் TN 45 AG 7777 என்ற அவரது அரசு வாகனத்தில் உள்ள டேஸ்போர்டில் 50,000 ரூபாய் பணம் மற்றும் லஞ்சப்பணம் குறித்த சில குறிப்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் விமலாவின் புரோக்கர் தென்னூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் விமலாவுக்கு கொடுக்க வைத்திருந்த லஞ்சப்பணம் சுமார் 12000 ரூபாய் பணத்துடன் சிக்கினார். புரோக்கர் ரமேசிடம் இருந்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா பயன்படுத்தும் அரசு முத்திரைகளும் (சீல்கள்) கைப்பற்றப்பட்டுள்ளது.
RTO வின் புரோக்கர் சேதுராஜ் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலாவின் புரோக்கர் ரமேஷ் ஆகிய இருவரும் பொதுமக்களிடம் பெரும் லஞ்சப்பணத்தை அந்த அதிகாரிகள் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அவர்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
RTO நடராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா இருவரும் ஊழல் தடுப்பு அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மௌனம் சாதித்துள்ளனர். இதையடுத்து, RTO நாடாஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, புரோக்கர்கள் சேதுராஜ், ரமேஷ் உட்பட நான்கு பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான டீம் வழக்குப்பதிவு செய்துள்ளது. அலுவலக கோப்புகளை விசாரணைக்கு அள்ளிச் சென்றுள்ளனர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார்.
இதனைத்தொடர்ந்து, ஸ்ரீரங்கம் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் உட்பட அனைத்து RTO அலுவலகங்களிலும் ரெய்டு செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.