2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். இந்த தேர்தலில் பல அமைச்சர்களுக்கு சீட் கொடுக்காமல் திமுக தலைமை கழற்றி விட்டு விட்டதாக அவர்களது ஆதரவு உடன்பிறப்புகள் குமுறி வருவதாக தகவல்கள் வெளிவருகிறது. போதாக்குறைக்கு. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த நிர்வாகிகளுக்கு திமுகவில் அதிக அளவில் சீட் ஒதுக்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவில் 60க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு திமுக தலைமை வாய்ப்பளித்திருப்பது வரவேற்பை பெற்றிருந்தாலும் கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு முதலில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டார். இந்த தேர்தலில் திமுக மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு 59 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல பல முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த தொகுதிகளில் மீண்டும் களம் காண உள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். காட்பாடி தொகுதியில் மூத்த தலைவர் துரைமுருகனுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால்தொகுதிகள் ஒதுக்கியதில், சில முக்கிய மாற்றங்களை திமுக தலைமை செய்திருக்கிறது. கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை (தெற்கு) தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது கொங்கு மண்டல அரசியலில் அதிர்ச்சி தரும் முடிவாக பார்க்கப்படுகிறது.
அதேபோல, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு திமுக தலைமை அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து திமுக வந்த மொத்தம் 19 பேருக்கு இந்த முறை வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கட்சிக்குள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய சில முக்கிய தலைவர்களுக்கு ஏற்கனவே முக்கிய பதவிகளும், அமைச்சரவை பொறுப்புகளும் வழங்கப்பட்டிருந்தது. அதில் செந்தில் பாலாஜி, முத்துசாமி, ரகுபதி, எ.வ. வேலு போன்றவர்களுக்கு முக்கிய துறைகள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலிலும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கே அதிக அளவில் சீட் வழங்கப்பட்டிருப்பதாக திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளுக்குள் குமுறி வருகின்றனராம். தேனி மாவட்டம் போடி தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம், ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியன், விளாத்திக்குளம் தொகுதியில் மார்க்கண்டேயன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதேபோல் சென்னை துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு, ஈரோடு மேற்கு தொகுதியில் முத்துசாமி, நாகர்கோவில் தொகுதியில் ஆஸ்டின், திருமங்கலம் தொகுதியில் மணிமாறன் ஆகியோருக்கும், முதுகுளத்தூர் தொகுதியில் ராஜகண்ணப்பன், அருப்புக்கோட்டை தொகுதியில் சாத்தூர் ராமச்சந்திரன், கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன், திருமயம் தொகுதியில் ரகுபதி, பெருந்துறை தொகுதியில் தோப்பு என்.டி.வெங்கடாசலம், விழுப்புரம் தொகுதியில் லட்சுமணன் உள்ளிட்டோருக்கும் இந்த முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய சிலர் திமுகவில் இணைந்துள்ளவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக கட்சிக்குள் சிலர் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.
வேட்பாளர் பட்டியல் வெளிவந்ததிலிருந்து திமுக வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது இந்த முறை திமுக வேட்பாளர் பட்டியலில் பல்வேறு சூட்சமங்கள் இருப்பினும்,அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தால் ஏற்பட்டுள்ள அதிருப்தி வரும் தேர்தலில் சில இடங்களில் ரிசல்ட்டில் எதிரொலிக்கும் என்கின்றனர் திமுகவினர்.
திமுக தலைமையின் அரசியல் கணக்கை தேர்தலுக்கு பின் உடன்பிறப்புகள் புரிந்துகொள்வார்கள் என்று சில முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றானாராம். களம் சொல்லப்போக்கும் வரலாறு என்ன.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

