அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க, எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து நீக்கி, நடவடிக்கை எடுத்தார். இந்த பரபரப்பான சூழலில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்கிறார்.
டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்களை சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் இருந்து இன்று காலை 8.50 மணிக்கு செங்கோட்டையன் டெல்லி புறப்படுகிறார்.
எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையை தொடர்ந்து, செங்கோட்டையனுக்கு ஆதரவாக 3,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்தனர். செங்கோட்டையனின் நிலைப்பாட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் முன்னாள் அமைச்சர்கள், மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா, பாஜக தமிழக நிர்வாகிகள், ஆதரவு தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டையனின் டெல்லி பயணம் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் செங்கோட்டையன் ஹரித்வார் செல்கிறேன், ராமரை தரிசனம் செய்துவிட்டு திரும்ப உள்ளேன் என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும், கட்சி வளர வேண்டும் எனவும் நாளை எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,