திரைப்பட முன்னணி நடிகர் சூர்யா ‘’அகரம் கல்வி அறக்கட்டளை’’ என்ற பெயரில் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி சென்னையில் அகரம் அறக்கட்டளையின் 20 – ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் நடிகரும், ம.நீ.ம. கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய கமலஹாசன் நீட் தேர்வு மற்றும் சனாதன தர்மம் குறித்துப் பேசினார். ‘’இந்த மேடையில் பார்த்த டாக்டர்களை அடுத்தாண்டு பார்க்க முடியுமா.? என்பது சந்தேகமே. ஏனெனில், நீட் வந்த பிறகு, 2017-ம் ஆண்டு முதல் பல மாணவர்களால் மருத்துவக் கல்வி பெற முடியவில்லை. இந்தச் சட்டத்தை மாற்றக்கூடிய பலம் கல்விக்கு மட்டுமே உண்டு. சர்வாதிகாரச் சங்கிலிகளையும், சனாதனச் சங்கிலிகளையும் நொறுக்கித் தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி. பெரும்பான்மை மூடர்களால் அறிவு தோற்கடிக்கப்படாமல் இருக்க, கல்வியை மட்டுமே ஆயுதமாக ஏந்துங்கள்,” என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்களுக்குப் ஒரு சிலரிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சனாதனத்திற்கு எதிராகப் பேசியதற்காக கமல்ஹாசனின் “சங்கை அறுப்பேன்” என்று மிரட்டல் விடுத்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
ரவிச்சந்திரனின் இந்தக் கருத்து தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வுபெற்ற ஐ.ஜி-யுமான மௌரியா தலைமையில் அந்தக் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில் சனாதனம் குறித்துப் பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு, சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரவிச்சந்திரன் தொடர்ந்து சர்ச்சியான வகையில் பேசிவருவதாக கூறப்படும் நிலையில், தற்போது கமலஹாசனை மிரட்டியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
Related posts
Click to comment