ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாறுகிறதா.? – காவல்துறை மீது தொடரும் நீதிமன்ற விமர்சனங்கள்..



பகுஜன் சமாஜ் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்


தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி புதிதாக கட்டப்பட்டு வரும் தனது வீட்டின் பணிகளை பார்வையிட சென்றார். வீடுக்கட்டும் பணிகளை பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டிக் கொன்றது. இந்த கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் தமிழகத்தில் பெரும் அச்சத்தையும் அதிர்வலைகலையும் ஏற்படுத்தியது. காவல்துறைக்கு பெரும் தலைவலியாக இந்த வழக்கு அமைந்த நிலையில், துரிதமாக செயல்பட வேண்டிய நிர்பந்தம் உருவானது. இந்த வழக்கில் காவல்துறைக்கு ஏற்பட்ட அழுத்தம் வழக்கின் போக்கையே மாற்றியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன.? பின்னணியில் இருந்து இயக்கியது யார்.? எப்படி இத்தனை ரவுடிகள் ஒன்றிணைந்து இந்த கொலையை செய்தனர்.? இவர்கள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங் என்ற மனிதரால் பாதிக்கப்பட்டவர்களா.? கொலை திட்டத்திற்கு பண உதவிகளை செய்தது யார்.? இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சம்பவ செந்திலை போலீஸாரால் நெருங்க முடியவில்லையா.? இப்படி பல கேள்விகள் முன் நிற்கிறது.

கொலைக்கான காரணம்


ரியல் எஸ்டேட் நிலத்தகராறு, ஸ்க்ராப் பிஸ்னஸ் போட்டி, தொழில் தகராறுகள், ஆருத்ரா கட்டப்பஞ்சாயத்து என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும், பட்டினப்பாக்கத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கொலை வழக்கு குறித்து வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார், கூலிப்படைதலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில், அடுத்தடுத்து 28 பேரை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிளான் போட்டு கொடுத்தது சிறையில் இருக்கும் பிரபல ரவுடியான நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் மற்றும் தலைமறைவு ரவுடியான சம்பவ செந்தில் ஆகிய மூவரும்தான் என்று தெரிய வந்துள்ளள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

திருவேங்கடம் என்கவுண்டர்


இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய ரவுடியான குன்றத்தூரை சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவனான திருவேங்கடத்தை ஆயுதங்களை கைப்பற்ற மாதவரம் ஏரிக்கரைக்கு போலீசார் அழைத்துச் சென்றபோது, ஏற்பட்ட மோதலில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

சீசிங் ராஜா என்கவுண்டர்


கொலை வழக்குகள் உட்பட 30 கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றவாளியான ஆற்காடு சுரேஷின் நண்பரான சீசிங் ராஜாவை பலநாட்களாக தேடிவந்த நிலையில், மனைவியுடன் ஆந்திராவில் இருப்பதையறிந்த தனிப்படை அங்கு சென்று ஒரு ஹோட்டலில் வைத்து, சீசிங் ராஜாவை கைது செய்தது. விசாரணைக்காக வேளச்சேரி போலீசார் அழைத்து சென்ற நிலையில், சீசிங் ராஜா என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

வழக்கில் சிக்கிய ரவுடிகள்


இந்த வழக்கில், வேலூர் சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகனும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளருமான அஸ்வத்தாமன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், ரவுடிகளான திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி, திமுக வழக்கறிஞர் அருள், திமுக நிர்வாகி குமரேசனின் மகன் சதீஷ், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், அதிமுக முன்னாள் பிரமுகர் மலர்க்கோடி, காங்கிரஸ் நிர்வாகி ஹரிதரன், பாஜக நிர்வாகி செல்வராஜ், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, மற்றும் பாஜக நிர்வாகியான ஆற்காடு சுரேஷின் காதலியான கஞ்சா வியாபாரி அஞ்சலை, வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், அப்பு, நூர் விஜய், புதூர் அப்பு, குமரன், கோபி, ராஜேஷ் என அடுத்தடுத்து 28 பேரை கைது செய்தது. இதில் 5 பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்து எடுக்கப்பட தகவல்களின் அடிப்படையில் 200 பேருக்கும் மேலானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவ செந்தில்


இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சம்போ செந்தில் என்கிற சம்பவ செந்திலை போலீசார் இன்று வரை தேடிவருகின்றனர். வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய சம்பவ செந்தில், வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான மாலைக்கண் செல்வத்தின் வழக்குகளை நடத்திய நிலையில், மாலைக்கண் செல்வம் ரவுடியிசத்தில் இருந்து மெல்ல மெல்ல ஒதுங்கிய நிலையில், அவரது கூட்டத்தில் இருந்த கல்வெட்டு ரவியுடன் சேர்ந்து பல கொலைகள் கட்டப்பஞ்சாயத்து. என களமிறங்கினார். எந்த சம்பவத்திலும் நேரடியாக ஈடுபடாத சம்பவ செந்தில் ஸ்கெட்ச் போட்டு கொடுத்து பல கொலைகளை தனது ஆதரவாளர்கள் மூலமாக செய்து வந்துள்ளார். இதுவரை ஒரு வழக்கில் கூட சம்பவ செந்தில் போலீசாரிடம் சிக்கியதில்லை என்கின்றனர்.
சென்னை கமிஷனராக அருண் பொறுப்பேற்றபோது சம்பவ செந்திலின் கதை முடிந்தது என்று ரவுடிகள் மத்தியில் பேசப்பட்டது. இருப்பினும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியான சம்பவ செந்திலை இதுவரை காவல்துறையால் நெருங்க முடியவில்லை.

குற்றப்பத்திகை தாக்கல் குளறுபடிகள்
நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை அதிக பக்கங்கள் இருப்பதை காரணம் காட்டி, குற்றப்பத்திரிக்கையின் நகல்களை பென்ட்ரைவ் மூலமாக போலீசார் கொடுத்துள்ளனர். இதை ஏற்க மறுத்த குற்றவாளிகள் சிறையில் பெண்ட்ரைவ் மூலமாக படிக்க இயலாது ஆகவே நகல்களை பேப்பரிலேயே வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு எழும்பூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இருந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அவசர கதியில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக் ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

விசாரணை முறையான நடக்கவில்லை வழக்கை சிபிஐக்கு மாற்றுங்கள் ஆம்ஸ்ட்ராங் மனைவி, சகோதரர் நீதிமன்றத்தில் மனு
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, இவ்வழக்கில் காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தவில்லை. முக்கியமான சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள அரசியல் தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகேந்திரனுக்கு நெருக்கமான செல்வப்பெருந்தகையிடம் விசாரணை நடத்தவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டர் குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வர முயற்சிக்காமல் அவசர அவசரமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரவுடிகள் என்பதால், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஆகஸ்ட் 5, 2025 நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம் காவல் துறைக்கு சரமரியான கேள்வி
அப்போது, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், ஆம்ஸ்ட்ராங் மனைவியின் மனுவை ஏற்ககூடாது என்று அரக்சுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டு, பின்னர் பல அறிவுறுத்தல்களுக்கு பின் இந்த வழக்கை 20 ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ஏன் அடையாள அணிவகுப்பை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அடையாள அணிவகுப்பின் முக்கியத்துவம் குறித்தும் அப்போது குறிப்பிட்டதோடு, ஊடகங்கள் அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணை செய்ய முடியுமா.? என்று கேள்வி கேட்டு அடையாள அணிவகுப்பின் முக்கியத்துவத்தை நீதிமன்றம் விளக்கியது.

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட 17 குற்றவாளிகள் விடுவிப்பு ஏன்.?


சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான ரவுடிகள் ஒன்றிணைத்து ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்டிருந்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியான A1 நாகேந்திரன், ஹரிஹரன்,மலர்க்கோடி,சதீஷ்,அஞ்சலை,சிவா,முகிலன்,பிரதீப்,விஜயகுமார்,அஸ்வத்தாமன்,ராஜேஷ்,செந்தில்குமார்,பொற்கொடி உள்ளிட்ட 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இவர்களில் 26 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் கைது செய்தனர்.
இதையடுத்து 17 பேர் மீதான குண்டர் தடுப்பு காவல் சட்டத்தினை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் பி.லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியராஜ் ஆகியோர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டு தான் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்று கூறினார்.
மேலும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் இடையே அதிக காலதாமதம் ஏற்பட்டது. இதனை நீதிபதிகள் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


14000 பக்க குண்டர் தடுப்பு காவல் கோப்பை ஒரே நாளில் மாநகர ஆணையர் A.அருண் படித்தாரா.? நீதிமன்றம் கேள்வி.?
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் பி. லட்சுமி நாராயணன் அமர்வு குண்டர் சட்டத்தின் மீதான தகவல்களை தருவது குற்றவாளிகளுக்கு தெரியப்படுத்துவது, உத்தரவுகள் தொடர்பான அனுமதி மற்றும் குளறுபடிகள் குறித்து கேள்விகளை அடுக்கினர்.
இதையடுத்து, A 1 நாகேந்திரன் உட்பட 17 பேர் மீதான குண்டற்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டள்ள காரணதிற்காக இவர்களுக்கு ஜாமீன் வழங்கிவிடக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

நீதிபதிகளின் கருத்தை நாம் இங்கு குறிப்பிடப்படவேண்டிய சூழல் இவ்வழக்கில் ஏற்பட்டுள்ளது
கோயம்பேடு வட்ட உதவி ஆணையர் 2024 செப்டம்பர் 19 அன்று 14000 பக்க ஆதாரங்களை சேர்த்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். அதே நாளில் சென்னை மாநகர ஆணையர் A.அருண் அந்த குண்டர் சட்ட தடுப்புக்காவல் பரிந்துரையை ஏற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து தடுப்புக்காவலில் சிறைப்படுத்தும் கோப்பில் கையெழுத்திட்டு உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மனிதனுக்கு 14000 பக்கங்களை ஒரே நாளில் வாசித்து முடிவெடுப்பது சாத்தியமல்ல. மனப்பூர்வமாக பரிசீலனை செய்யவில்லை. மனப்பூர்வ சிந்தனையின்றி எடுத்த முடிவாக இருக்கிறது. குண்டர் தடுப்பு சட்ட தடுப்புக்காவல் என்பது ஒருவரை தண்டிக்க அல்ல. பொது அமைதிக்கு ஆபத்து ஏற்ப்படுத்துவதை தடுக்கவே பயன்படுத்தப்படும். ஆகையால் மனப்பூர்வமாக கவனமாக பரிசீலனை செய்யவேண்டும். உண்மையான மனப்பூர்வ சிந்தனையின்றி இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பித்தால், சட்டத்தின் நோக்கமே தோல்வியடையும். இது கோபத்தில் அல்லது பழிவாங்கும் விதத்தில் குண்டர் சட்ட தடுப்புக்காவல் போடமுடியாது என்பதற்கான முக்கியமான தீர்ப்பு. காவல் ஆணையர்கள் போன்ற அதிகாரிகள் மிகவும் கவனமாக சட்டப்படி மனப்பூர்வமாக செயல்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிடுகின்றனர்.


ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் என்ன நடக்கிறது.?
இந்த நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு பின், ஆம்ஸ்ட்ராங் மனைவி இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை கூறியது மனு தாக்கல் செய்தது நியாயமான அணுகுமுறைதான் போலீசார் இந்த வழக்கை முறையாக கையாளவில்லை என்ற வாதம் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்த வழக்கில் காவல்துறை நடவடிக்கையில் ஏன் இத்தனை குளறுபடிகள், இத்தனை தாமதங்கள், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே இந்த வழக்கை காவல்துறை முறையாக விசாரிக்க வில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதை உறுதி படுத்தும் விதமாக காவல்துறையின் செயல்பாடும் காவல் ஆணையரின் செயல்பாடும் அமைந்து விட்டதை மறுக்க இயலாது.

முறையாக விசாரித்து வெளிப்படை தன்மையுடன் அணுகவேண்டிய முக்கிய வழக்கு ஒன்று காவல்துறை ஆணையரின் நடவடிக்கையாலேயே நீர்த்துப்போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 14000 பக்கங்கள் கொண்ட குண்டர்தடுப்பு கோப்புகளை ஒரே நாளில் படித்து ஆராய்ந்து கையெழுத்து போட்ட விவகாரம் தான் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

இந்த வழக்கு சரியான கோணத்தில் தான் பயணிக்கிறதா.? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரின் கூற்றுப்படி வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லையோ.? என்ற எண்ணத்தை ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மத்தியில் விதைத்திருக்கிறது.
ஒரு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை தருவதற்கு நீதிமன்றதிற்கு வலுவான ஆதாரங்கள் தேவைப்படும் ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகள் குறித்து சாட்சிகள் முன்னிலையில் நடத்தப்படவேண்டிய அடையாள அணிவகுப்பை கூட நடத்தாமல் ஊடங்கங்களில் அடையாளங்கள் வெளிப்படையாக வந்துள்ளதால் குற்றவாளிகளை கண்டறியும் அடையாள அணிவகுப்பை நடத்தவில்லை என்று நீதிமன்றத்தில் கூறி குட்டு வங்கியிருக்கிறது தமிழக காவல்துறை.
இந்நிலையில், இந்த கொலைக்காக பெரும் தொகை கைமாறியிருக்கிறது. பல்வேறு கட்சிகளின் முக்கிய புள்ளிகள் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாக ஆம்ஸ்ட்ராங்க் மனைவி கூறுவதை மறுத்துவிட முடியாது. காவல்துறை இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை மாறாக, அவசரகதியில் செயல்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்பவ செந்திலை போலீசாரால் இதுவரை நெருங்க முடியவில்லை.
சிபிஐ விசாரணை கோரி, ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்தினரின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களின் ஒருமித்த கருத்தாக எதிரொலிக்கிறது.

தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இழந்த நிலையில், வழக்கை எப்படியும் சிபிஐக்கு மாற்றிவிட வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த வழக்கின் போக்கு சரியான பாதைக்கு திரும்புமா.? அல்லது இந்த வழக்கு சிபிஐ வசம் செல்லுமா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


banner

Related posts

திருச்சி மத்திய சிறை காவலர்கள் 20பேர் மீது வழக்குப்பதிவு – விலகாத மத்திய சிறையின் மர்மங்கள்

Ambalam News

நண்பர்களால் தாக்கப்பட்ட எஸ்.ஐ ராஜாராமன் உயிரிழப்பு

Admin

உங்கள் மீதான குற்றச்சாட்டை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?” வஞ்சிநாதன்..

Admin

Leave a Comment