ராமநாதபுரம் சமஸ்தான ‘’போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்’’ விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!
ராமநாதபுரம் சமஸ்தான வாரிசுகள் சொத்து தகராறில் நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளனர். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் வாரிசு என்று கூறி சொத்துக்களை அபகரிக்கும் நாகேந்திர சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாகேந்திர சேதுபதி என்பவர் போலியான வாரிசு சான்றிதழ் பெற்று சொத்துக்களை அபகரிப்பதாக வழக்கறிஞர் கிரிராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம், புகார்தாரர் குறிப்பிட்டுள்ளதைப் போல், சான்றிதழ் போலியானது என நிரூபணமானால், நாகேந்திர சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று வாரத்தில் விசாரணையை முடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள தனது மனுவில் ” நான் ராமநாதபுரம் மாவட்ட சமஸ்தான ராஜபாஸ்கர் சேதுபதியின் பேரன் ” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, குமரன் சேதுபதி என்பவரது மகனான நாகேந்திர சேதுபதி, 2010 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஜமீன்தார் கிருஷ்ணசாமி குடும்பத்தினருக்கு தத்து கொடுக்கப்பட்டார். தற்போது அவர் சட்டப்படியான வாரிசாக பதிவு பெற்று அவர்களது சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நாகேந்திர சேதுபதியின் தந்தை குமரன் சேதுபதி 2022 ஆம் ஆண்டு மரணமடைந்து விட்டார். அவரது இறப்புக்குப் பிறகு, நாகேந்திர சேதுபதி மீண்டும் வருவாய்த்துறையினர் உதவியுடன் குமரன் சேதுபதியின் வாரிசு என்று போலியாக சான்றிதழைப் பெற்றுள்ளார்.
மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்ற நாகேந்திர சேதுபதி ராமநாதபுரம் சமஸ்தான சொத்துக்களை விற்பனை செய்து வருகிறார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், போலியாக ஆவணம் தயார் செய்து வாரிசு சான்றிதழ் பெற்ற நாகேந்திர சேதுபதி மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிரிராஜ் தனது மனுவில் கூறியிருந்தார்
இந்த மனு நீதிபதி புகழேந்தி அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் புகார் குறித்து ஏற்கனவே ராமநாதபுரம் போலீசார் போலி வாரிசு சான்றிதழ் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காததால் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலீசார் உரிய விசாரணை செய்து போலியான வாரிசு சான்று பெறப்பட்டிருந்தால் போலீசார் சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது குறித்த அனைத்து விசாரணையையும் மூன்று வாரத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கிரிராஜ் தொடுத்த இந்த வழக்கின் வாயிலாக, இராமநாதபுரம் சமஸ்தான ‘’போலி வாரிசு விவகாரம்’’ வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அம்பலம் செய்திப்பிரிவு