ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சூலூர்பேட்டையில் குற்றவாளி கைது


ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சூலூர்பேட்டையில் குற்றவாளி கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் செல்லியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி பள்ளியிலிருந்து தனது பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றார்.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், பிறகு பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், ஆரம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் சிறுமியை பின்தொடர்ந்து செல்வது பதிவாகி இருந்தது. அவர் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வாலிபரை போலீசார் தீவிரமாக தேடினர். ஆனாலும், 10 நாட்களுக்கும் மேலாக பொலிஸாரால் குற்றவாளியை நெருங்க முடியவில்லை. குற்றவாளியை கைது செய்யக்கோரி, பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர் மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, குற்றவாளி பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்தது.

மேலும், டிஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சுமார் 15 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆந்திர மாநிலம் சூலூர்ப்பேட்டை, நெல்லூர், குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லூர் புறப்பட்ட மின்சார ரயிலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் முகஜாடையுடன் போதையில் தள்ளாடியபடி ஒருவர் ஏறினார். இதைக் கண்ட தனிப்படை போலீசார் அந்த நபரை பின் தொடர்ந்துள்ளனர்.

சூலூர்ப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த நபரை தனிப்படை போலீசார் செல்போனில் படம் பிடித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீக்கு அனுப்பினர். சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற டிஎஸ்பி ஜெயஸ்ரீ அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காட்டியபோது குற்றவாளியை உறுதிபடுத்தியதோடு, குற்றவாளியின் உடைந்த பல் அடையாளத்தையும் காட்டி அந்த சிறுமி உறுதி படுத்தியுள்ளார்.

அவர்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்த பின்னர் டிஎஸ்பி ஜெயஸ்ரீ, தனிப்படை போலீசாரை தொடர்பு கொண்டு அந்த நபரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், அவனது பல் உடைந்துள்ளதா என்று பார்க்குமாறு கூறினார். போலீசார் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும், அவனது பல் உடைந்திருப்பதை உறுதி செய்தனர். பின்னர், ஆரம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்த நபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், சூலூர்ப்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கஞ்சா போதையில் ஆரம்பாக்கம், அக்கம்மாபேட்டை, தடா பகுதிகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, போலீசார் அந்த நபரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


banner

Related posts

செந்தில் பாலாஜியின் ரிப்போர்ட் | மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவி பறிப்பு.! கட்டம் கட்டிய மு.க.ஸ்டாலின்

Ambalam News

தவெக மாநாடு : மேடையில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் சரத்குமார் பெரம்பலூர் எஸ்.பி அலுவலகத்தில் பவுன்சர் மீது புகார்

Ambalam News

இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்றனர்..

Ambalam News

Leave a Comment