போதைப்பொருள் வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக பிரமுகரான பிரசாத் கொடுத்த வாக்குமூலத்தில் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக கூறியதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அவரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது மேலும் விசாரணையும் செய்யப்பட்டது. அதன் முடிவில், சில ஆதாரங்களின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தங்களுடைய விசாரணையை விரிவுப்படுத்தி உள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த தகவலின் அடிப்படையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு சென்னை நுங்கம்பாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். இந் நிலையில் நேற்று தனது வழக்கறிஞர்களுடன், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கிருஷ்ணா ஆஜரானார். அவரிடம் போதைப் பொருளை பயன்படுத்தியது குறித்தும், போதைப் பொருள் விற்பனை செய்தாரா? அல்லது போதைப்பொருள் விற்பனை செய்தவரிடம் அவர் தொடர்பில் இருந்தாரா? என்ற மூன்று கோணத்தில் பல மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், போதைப்பொருள் விற்பனை செய்பவர்களிடம் நடிகர் கிருஷ்ணாவுக்கு பணப்புழக்கம் இருந்துள்ளதா.? என்கிற அடிப்பையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நேற்றைய தினம் அவரிடம் மருத்துவ பரிசோதனை செய்தநிலையில், அதன் முடிவுகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரபல நடிகர்களான ஸ்ரீகாந்த் கிருஷ்ணா ஆகியோரின் போதைப்பொருள் தொடர்பு விவகாரம் தமிழக திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.