ஈரோட்டில் இரவு நேரத்தில் விதிமுறைகளை மீறி உணவகத்தைத் திறந்து வைத்திருந்ததால் கடையை மூடும்படி கூறியதால் காவலருக்கும் கடைக்கக்காரருக்கும் ஏற்ப்பட்ட வாய்த்தகராரில் கடையில் இருந்த பொருட்களைக் காவலர் கீழே தள்ளிவிட்டுள்ளார். மேலும், இது குறித்து கேள்வி எழுப்பிய வட மாநில இளைஞரைத் தகாத வார்த்தைகளால் திட்டிய காவலர், “ஊரு விட்டு ஊரு பிழைக்க வந்த நாய்” என்றும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வட மாநிலங்களில் இருந்து பலரும் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அரசு வழங்கி வருகிறது. சில நேரங்களில் மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஈரோட்டில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியில் காவலர் ஒருவர் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பகுதியில் 10 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் நிலையில், குறிப்பிட்ட துரித உணவகக் கடை மட்டும் 10 மணியைத் தாண்டிக் கூடுதலாக 20 நிமிடங்கள் திறந்து இருந்துள்ளது. கடையில் சிலர் சாப்பிட்டுக் கொண்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அந்தக் காவலர் உடனடியாகக் கடையை மூடுமாறு அந்த வடமாநில ஊழியர்களிடம் கூறியிருக்கிறார். இருப்பினும், கடையின் உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாலேயே கடையை மூட தாமதம் ஆனதாக அந்த வட மாநில ஊழியர் சொல்லி இருக்கிறார்.
வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதால் அவர்கள் சாப்பிட்ட உடன் கடையை மூடிவிடுவதாகச் சொல்லி இருக்கிறார். இதை ஏற்க மறுத்த அந்தக் காவலர், உடனடியாகக் கடையை மூடுமாறு சொல்லி இருக்கிறார். காவலரிடம் வடமாநில இளைஞர் மறுத்து பேசவே, காவலர் அங்கிருக்கும் பொருட்களைத் தனது கையில் இருந்த லத்தியால் தள்ளிவிட்டுள்ளார். கடையை 10 மணிக்கு மூட வேண்டும் என ஏற்கவே சொல்லிய பிறகும் கடையை எப்படித் திறந்து வைக்கலாம் எனக் கேட்டுக் கத்தியுள்ளார். மேலும், உணவுப் பொருட்களையும் தள்ளிவிட்டுள்ளார். உடனடியாக விளக்கை அணைக்கச் சொல்லி, சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களையும் வெளியே அனுப்பியுள்ளார்.
அப்போது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த ஒரு இளைஞர், பொருட்களைத் தள்ளிவிட வேண்டாம் எனச் சொல்லியுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த காவலர், அவரை தள்ளிவிட்டு இருக்கிறார். 10 மணிக்கு மேல் கடையைத் திறக்கக்கூடாது எனச் சொல்லித் தாக்கியதாக தெரிகிறது. அங்கிருந்து கிளம்பும்போது, “எந்த ஊரு டா நீ.. ஊரு விட்டு ஊரு பிழைக்க வந்த நாய்” என்று தரக்குறைவாகப் பேசியுள்ளார். மேலும், ஆபாச வார்த்தைகளால் திட்டிய அவர், எப்படிக் கடையை நடத்துகிறாய் என பார்க்கலாம் என்றும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இவை அனைத்துமே கடையில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பதிவான வீடியோ வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் காவலர் செயலைக் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்தது தவறு தான் என்றாலும் அதற்காக உணவுப் பொருட்களைக் கீழே தள்ளிவிடுவதில் என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்பினர்.
தங்கள் ஊரில் பிழைப்பிற்கு வழியில்லாமலேயே வடமாநில இளைஞர்கள் இங்கு வந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை இப்படித் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசுவதில் துளியும் நியாயம் இல்லை என்றும் சாடி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்டக் காவலர் மோகன் குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

