கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் “ஜனநாயகன்” திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்” என பதிலளித்த த.வெ.க. தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இந்த விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார்.
ஜனநாயகன் படத்தை விஜய் தனது கடைசி படமாக அறிவித்திருந்த நிலையில் ,நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவரது ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இன்னமும் சான்றிதழ் கிடைக்காததால் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.
ஜனநாயகன் படம் குறித்து தவெக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்” என அவர் பதிலளித்ததுடன், “தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என மக்கள் காத்திருக்கின்றனர். திரைப்படத்திற்கு தடை விதிப்பது அவர்களுக்கு நல்லதல்ல. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அது வேதனைக்குரியதாக அமையும்.திரைப்படத்தை தடுக்குவது சரியான முடிவாக இருக்காது. அப்படி செய்தால் அது அவர்களுக்கே பாதகமாக முடியும்” என தெரிவித்தார். வழக்கு தொடரப்படுமா.? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது என் கவனத்திற்கு வரவில்லை” என்று செங்கோட்டையன் கூறினார்.
இந்த நிலையில் தான் படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கே.வி.என் நிறுவன தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், நீதிபதி பிடி ஆஷா முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார். வழக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மதியம் 2.15 மணிக்கு விசாரிப்பதாக அறிவித்துள்ளார். இதனால் இன்று மதியம் ஜன நாயகன் படம் திட்டமிட்டபடி 9ம் தேதி வெளியாகுமா.? வெளியாகாத.? என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

