தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும்கட்சியான திமுகவினரும் எதிர்க்கட்சியான அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கி பேசிவரும் நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது தொடர் குற்றச்சாட்டுகளை வீசி விமர்சனம் செய்து வருகின்றனர். செங்கோட்டையன் ஒருபுறம் ஓபிஎஸ் ஒருபுறம் டிடிவி. தினகரன் ஒருபுறம் என்று சுற்றி வளைத்து விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. பழனிச்சாமி திமுகவிடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒப்பந்தம் இருப்பதுபோல் தெரிகிறது என்று விமரசித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,.,இதுவரை எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட 170 தொகுதிகள் பிரச்சாரத்திற்கு சென்றிருக்கிறார். அந்த 170 தொகுதிகளிலும் அந்தந்த ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக எதாவது பேசியிருக்கிறாரா? திமுக MLA க்களுக்கு எதிராக எதாவது பேசியிருக்கிறாரா? எதுவும் இல்லை, மாறாக ஐ.பெரியசாமி, துரைமுருகன் போன்றவர்களை பாராட்டி தான் பேசியிருக்கிறார்!
ஆனால் செந்தில் பாலாஜி, ஓ.பி.எஸ் போன்ற முன்னாள் அதிமுகவினரை எதிர்த்து பேசி வருகிறார். உட்கட்சியில் இவரோடு கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களை பற்றி மட்டும் தான் பேசுகிறாரே தவிர வேறு யாரையும் எதிர்த்து பேசுவதில்லை,
எந்த இடத்திலும் முதல்வர் ஸ்டாலினையோ, உதயநிதியையோ, சபரீசனையோ விமர்சிப்பதில்லை, திமுக அரசாங்கத்தினுடைய சில திட்டங்களை குறை சொல்லி பேசுகிறார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை சரி செய்துகொடுப்போம் என்று சொல்கிறார், ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் Corruption, Collection, Comission என்று பிரச்சாரம் செய்தார், 14 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி கவர்னரிடம் ஆதாரங்கள் கொடுத்தார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று எல்லாம் பிரச்சாரம் செய்தார்.
அது போன்றெல்லாம் தற்போது எடப்பாடி திமுகவுக்கு எதிராக எதுமே பேசுவதில்லை. ஸ்டாலினும் முன்பு சொன்ன எதையும் செய்யவில்லை. இதையெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் இவர்களுக்கிடையே ஒப்பந்தம் இருப்பது போல தெரிகிறது என்று எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.