
தமிழகத்தில் இன்னும் 7 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை கடுமையாக அதிமுகவினர் எல்லை மீறி விமர்சிப்பதாக கூறப்பட்டது வரும் நிலையில், நிதி மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு மக்களுக்காக எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மக்களின் வரிப் பணத்தோடு, இதுவரை 4.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து, வீண் ஜம்பம் அடிக்கும் வேலையில்தான் ஈடுபட்டுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எடப்பாடி கே. பழனிச்சாமி தனது முகநூல் பக்கத்தில், நிதி மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியில், அ.இ.அ.தி.மு.க ஆட்சியின்போது துவக்கப்பட்டு, 80 சதவீதம் வரை நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, வேண்டும் என்றே மூன்றாண்டுகளுக்குமேல் இழுத்தடித்து, தாங்கள் கொண்டுவந்தது போல் ஸ்டிக்கர் ஒட்டி திறந்த மோசடி நாடகம்தான் நடந்ததே தவிர, இந்த அரசு மக்களுக்காக எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மக்களின் வரிப் பணத்தோடு, இதுவரை 4.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து, வீண் ஜம்பம் அடிக்கும் வேலையில்தான் ஈடுபட்டுள்ளது.
இது பொம்மை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் 53 மாத கால ஆட்சியில் தமிழ் நாடு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துள்ளதோடு, நிதி மேலாண்மையிலும் தனது தோல்வியை பறைசாற்றியுள்ளது.
செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவிற்கும், வரி செலுத்தும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆட்சியாளர்கள் என்பதை நினைவில்கொண்டு உடனடியாக கடன் வாங்குவதை குறைத்து, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களின் நிதி நிலை பற்றியும், வாங்கியுள்ள கடன் தொகை எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பது பற்றியும் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.