சிலைடு சிங்காரம் கடுப்பு கந்தசாமி – அரசியல் அரட்டை
எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று திரும்பிய பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிருப்தியாளர்கள் அமைதியாக எந்த அறிவிப்புகளையும் வெளியிடாமல் இருக்கின்றனரே.? என்று கேட்டபடியே வந்து அமர்ந்த சிலைடு சிங்காரம்
படித்துக்கொண்டிருந்த நியூஸ் பேப்பரை முடிவைத்த கடுப்பு கந்தசாமி..
நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.!? பாவம் செங்கோட்டையன் என்றபடியே தொடர்ந்தார். பல மாதங்களுக்கு முன்னரே எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து ,அதிமுக ஒருங்கிணைப்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்தால்தான் எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும், தேர்தலிலும் வெற்றி பெற முடியும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் என்ற முடிவோடு, பாஜகவின் தேசிய தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்தார். அப்போது, சற்று பொறுமையாக இருங்கள், கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக முடிவெடுத்தபின் பேசிக்கொள்வோம் என்று கூறி அனுப்பியுள்ளனர். கூட்டணி விவகாரங்கள் உறுதியான சில மாதங்களிலேயே டெல்லியில் இருந்து செங்கோட்டையனுக்கு சிக்னல் கிடைத்துள்ளது. பாஜகவை நம்பி அதிமுக ஒருங்கிணைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்தார் செங்கோட்டையன்.
அதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்ப்பட்ட நெருக்கடியை வேறுவிதமாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டு காய் நகர்த்திய பாஜக, எடப்பாடி பழனிச்சாமியை டெல்லிக்கு அழைத்து செங்கோட்டையானால் ஏற்பட்ட நெருக்கடியை பயன்படுத்தி, தொகுதி பங்கீடு விஷயத்தில் அதிக தொகுதிகளை குறி வைத்து பேச்சுவார்த்தை நடத்தி தங்களது தேவையை பூர்த்தி செய்து கொண்டு செங்கோட்டையனை கழட்டிவிட்டு விட்டது.
எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றபோது மிகுந்த நம்பிக்கையோடு இருந்திருக்கிறார் செங்கோட்டையன். தனக்கு அதிமுகவில் உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்று நம்பியிருந்தார். ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பாஜக ஆழமாக பேசவில்லை. அந்த பிரச்சனையின் முடிவை எடப்பாடி பழனிச்சாமியிடமே விட்டு விட்டது பாஜக.
இப்ப செங்கோட்டையனின் நிலை.? அவ்வளவுதானா.?
பாஜகவை நம்பிய ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு நேர்ந்த கதிதான் செங்கோட்டையனுக்கும், செங்கோட்டையானால் இப்போது பாஜகவுக்கு எதிராக வாய்திறக்க முடியாத இக்கட்டான சூழல். பாஜகவை பொறுத்தமட்டில் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு எல்லாமுமாக இருக்கிறார். ஆக, செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு கோஷம் தேவையற்றது. அதனால் செங்கோட்டையனின் அரசியல் செல்லலாகாசாக்கி விட்டது.
ஆனால் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியை விடுவதாக இல்லை. வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை காலி செய்து வீட்டுக்கு அனுப்புவதுதான் அவரது அஜண்டாவாக இருக்கும். அதனால்தான் அவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். விரைவில் பாஜக அதிமுகவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கும் அளவுக்கு அடுத்த கட்ட முடிவுகள் இருக்கலாம்.
சரி தற்போது தமிழக பாஜக தலைவர்கள் எதற்காக டிடிவி தினக்காரணை சந்திக்கிறார்கள் ஒருங்கிணைப்பு குறித்து பேசுகிறார்கள். ? டிடிவி தினகரன் ஓபிஎஸ் செங்கோட்டையனுடன் சேர்வாரா.? சேர்த்துக்கொள்ளப்படுவாரா.?
டிடிவி தினகரனை அண்ணாமலை சந்திததை தானே கேடிக்கின்றீர்.? அண்ணாமலை பாஜகவால் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் டிடிவி தினகரனை சந்திததற்கு பல காரணங்கள் இருக்கலாம் அவரது தனிப்பட்ட அரசியலாக கூட இருக்கலாம். டிடிவி தினகரனை பொறுத்தவரை அவர் செங்கோட்டையன் ஓபிஎஸ் உடன் சேர்வதற்கு தயாராகத்தான் இருப்பார். ஆனால் செங்கோட்டையன் ஓபிஎஸ் இவர்களில் ஒருவர் எடுப்பதுதான் இறுதி முடிவாக இருக்கும். இதனால் தான் டி டி வி தினகரன் தனது கட்சிப்பணியில் தீவிரமாக இருக்கிறார். செங்கோட்டையன் ஓபிஎஸ் சந்திப்புதான் தற்போது, அதிமுகவில் பரபரப்பு டாப்பிக்காக ஓட்டிக்கொண்டிருக்கிறது.
செங்கோட்டையன் ஓபிஎஸ் டிடிவி தினகரன் என்ன செய்யப்போகிறார்கள்.? எப்படி சமாளிக்கப்போகிறார் எடப்பாடி பழனிச்சாமி
இந்தசூழலில் தான் நேற்று செங்கோட்டையன் சென்னை வந்து சென்றபோது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு சுமார் 2 மணிநேரம் நீடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நண்பர் வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை செய்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த தேர்தலை பொறுத்தவரை திமுகவை சமாளிப்பதைவிட செங்கோட்டையன் ஓபிஎஸ் டிடிவி தினகரன் இவர்களை சமாளிப்பதுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவாலாக இருக்கும். பாஜக-அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு என்பது சாத்தியமில்லை என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும், கட்சி விஷயத்தில் சமரசம் செய்து கொள்வதாக இல்லை எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர் அவரை நன்கறிந்தவர்கள். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக கட்சியை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
தலைவர் வீம்புக்கு கடப்பாரையை விழுங்க நினைக்கிறார் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.