மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமலுக்கு வருவதையொட்டி பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது இந்த சீர்திருத்தத்தை ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா என பிரதமர் வர்ணித்தார். இதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘நரேந்திர மோடிஜி, காங்கிரசின் எளிமையான மற்றும் திறமையான ஜி.எஸ்.டி.க்கு பதிலாக உங்கள் அரசு கப்பார் சிங் சிங் வரியை 9 வெவ்வேறு அடுக்குகளில் விதித்தது. கடந்த 8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடிக்கு அதிகமாக வசூலித்தது. தற்போது ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு திருவிழா குறித்து பேசுகிறீர்கள். மக்களுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்திய பிறகு ஒரு எளிய கட்டு போடுகிறீர்கள்’ என சாடியுள்ளார்.
மேலும் அவர், ‘மக்கள் தங்களின் பருப்பு, அரிசி, தானியங்கள், பென்சில், புத்தகம், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் விவசாயிகளின் டிராக்டர்கள் என ஒவ்வொன்றுக்கும் நீங்கள் ஜி.எஸ்.டி. வசூலித்ததை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இதற்காக உங்கள் அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.