புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நாடோடி பழங்குடியின மாணவனை தலைமையாசிரியர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்களும் தலைமை ஆசிரியருடன் சேர்ந்து கொண்டு பழங்குடியின மக்களிடம் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த மீமிசல் அருகே உள்ள கீழ ஏம்பல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பாடு வருகிறது. அந்த பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த நாடோடி பழங்குடி வகுப்பினரான மாணவர் ஒருவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளி சென்ற அந்த மாணவனை அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி கடுமையாக தாக்கியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட சிறுவன் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளியில் மாணவன் இயற்கை உபாதை சென்றதால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் யார் க்ளீன் செய்வது.? என்று கேட்டு மாணவனை தாக்கியதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டிள்ளனர்.
இது குறித்து மாணவனின் பெற்றோர்கள் நேற்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்க சென்றபோது, அவர் தங்களை ஜாதி பெயரை சொல்லி திட்டியிருக்கிறார். கிராம மக்களும் சேர்ந்து தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக தங்களை தாக்கியதாகவும் மாணவனின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் நாடோடி பழங்குடி இனத்தை சேர்ந்த தங்கள் பிள்ளைகள் ஏழு பேர் அந்த பள்ளியில் படித்துவரும் நிலையில், ‘’உங்க பசங்க இங்க படிக்கக்கூடாது’’ என்று ஜாதிய பாகுபாடு அங்கு பார்க்கப்படுவதாகவும், அதன் விளைவாகத்தான் தங்கள் மகன் தாக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அந்த கிராமத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவரின் பெற்றோர் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவனை தாக்கிய தலைமையாசிரியர் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.