மக்கள் போராட்டமும், நேபாள அரசின் ஆட்சி கவிழ்ப்பும் ஆட்சியாளர்களுக்கு ஆகச் சிறந்த வரலாற்று பாடம் மக்களுக்கெதிரான சர்வாதிகாரம், ஊழல், அடக்குமுறைகள் நெடுங்காலத்திற்கு நீடிக்கது என்பதை நேபாள இளைஞர்களின் போராட்டம் உலகிற்கு உணர்த்தியிருக்கிறது.

அண்டை நாடான நேபாளத்தில், ஊழல் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டமானது அரசுக்கு எதிரான கலவரமாக வெடித்தது. நேபாள அரசின் சமூக வலைத்தளங்களுக்கான தடையே இந்த போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்தது.
‘’ஹமி நேபாள்’’ எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் தலைவராக உள்ள சூடான் குருங் என்பவர்தான் இந்த போராட்டத்தின் மூளையாக செயல்பட்டவர். கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தனது மகனை பறிகொடுத்த அவர், பேரிடர் பாதித்த மக்களுக்கு உதவுவது, இளைஞர்களை ஒன்றாக இணைத்து சமூக செயற்பாட்டுக்கான குழுவை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தினார். மக்களுக்கு உதவி செய்யும் பணியை அவரது அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பில் அதிகமான இளைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சூடான் குருங் தான் கையில் புத்தகம், ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து காத்மாண்டுவில் பல ஆயிரம் இளைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார். அதன்பிறகு அமைதி பேரணி என்ற பெயரில் போராட்டத்தை முன்னெடுக்க திட்டம் போட்டு கொடுத்துள்ளார். அந்த அமைதிப்பேரணி தான் நேபாள அரசுக்கு எதிரான கலவரமாக மாறி தீவிரமடைந்தது. கலவரக்காரர்கள் வன்முறையில் இறங்கினார்.
போராட்டத்தின் தொடக்கமாக பள்ளி சீருடையில் கையில் புத்தகங்களுடன் கூடிய இளைஞர்கள், நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிடும் முடிவை முன்னெடுத்து நகர்ந்தனர். இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனால் அரசு இயந்திரம் நடத்திய துப்பாக்கி சூட்டில், 19 பேர் உயிரிழந்த நிலையில், மேலும், பலர் காயமடைந்தனர். போலீசாரால் மாற்றும் ராணுவத்தால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், முழுமையாக ராணுவம் களமிறக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், நிலைமை கட்டுக்குள் வரவில்லை.
இதையடுத்து 26 சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும் வாபஸ் பெறுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. மேலும், வன்முறை குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும், சமூக வலைத்தளங்களுக்கான தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் போராட்டங்களைக் கைவிட வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி அழைப்பு விடுத்தார்.
இருப்பினும், அதை ஏற்கப் போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். கே.பி. ஷர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஆனால் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த அந்நாட்டு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலக மாட்டார் என முதலில் கூறியிருந்தார்.
இந்நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு இயந்திரம் கடுமையாக போராடியது. ஆனால், காத்மண்டுவில் தொடர்ந்து, பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. நேபாள பிரதமரின் இல்லத்தில் வன்முறையாளர்கள் நுழைந்தனர். இதனால் நிலைமை மோசமானது. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த ராணுவ தலைமை, பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
முன்னதாக, வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, கூட்டணி அரசில் அமைச்சரவையில் அங்கம் வகித்த உள்துறை அமைச்சர் ரமேஷ் வன்முறைக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை புறக்கணிப்பதாகக் கூறி, பல அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

இத்தகைய சூழ்நிலைகளில் அரசில் நீடிப்பது சாத்தியமில்லை என்று சொல்லி சுகாதார அமைச்சர் பிரதீப் பவுடலும், அவரை தொடர்ந்து, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் தேஜுலால் சவுத்ரி, நீர் வளத்துறை அமைச்சர் பிரதீப் யாதவ் ஆகியோரும் ராஜினாமா செய்தனர். வரிசையாக ஆளும் தரப்பினர் பலரும் அரசுக்கு எதிராகத் திரும்பி ராஜினாமா செய்தனர். ராணுவத்தின் அழுத்தம் அமைச்சர்களின் ராஜினாமா என்று நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து வேறு வழியில்லாமல், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு பணிந்து கே.பி. ஷர்மா ஒலி பதவி விலகி தப்பிச்சென்றுள்ளார்.
2K கிட்ஸ்களின் GEN Z தலைமுறை என்று அழைக்கப்படும் இளைஞர்கள் பட்டாளம் நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் ஆட்சியை கவிழ்த்துள்ளனர்.