மதுரை மேயரின் கணவர் கைது – மேயர் ராஜினாமா?



மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் கசிகின்றது.
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முன்னாள் உதவி கமிஷனர் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், உள்ளிட்ட 13 பேர் இதுவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
அதிமுக சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, வரிவிதிப்புக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் விஜயலட்சுமி மற்றும் 96-வது வார்டு கவுன்சிலர் கண்ணன், செந்தில்பாண்டி ஆகியோர் கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜரானனர். கிடுக்கிப்பிடி விசாரணையின் பிறகு கண்ணன் மற்றும் செந்தில்பாண்டி கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், மேயரின் கணவர், 3-வது மண்டலத் தலைவரின் கணவர், தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், 3-வது மண்டலத்தில் பணியாற்றிய முன்னாள் உதவி கமிஷனர் சுரேஷ்குமாரும் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை போலீசார் விசாரிக்கத் தீர்மானித்தனர். ஆனால் அவர் தலைமறைவான நிலையில், சென்னையில் முன்ஜாமீன் பெற முயன்றதை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னைக்கு சென்று நேற்று பொன்வசந்தை அதிரடியாக கைது செய்தனர்.
அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் இதயத்தில் பிரச்னைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், அவர் இன்று காலை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மேலும் பலர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.


banner

Related posts

‘’மாமூல் வாங்குறதுக்கு.. பிச்சை எடுத்து சாப்பிடலாம்’’ மாமூல் போலீசாருக்கு டோஸ் விட்ட கடலூர் எஸ்பி.ஜெயக்குமார்

Ambalam News

வெளி மாநில மதுபாட்டிகள் காரில் கடத்தல் – காரை கைப்பற்றி போலீசார் விசாரணை

Ambalam News

பெண்களை மிரட்டிய காவல் உதவி ஆணையர் 2 ஆய்வாளர்களுக்கு 2.50 லட்சம் அபராதம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

Ambalam News

Leave a Comment