ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது எல்லைப் பிரச்னையால் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களது படகுகள் வலைகள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நாளை முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம், இலங்கை கடற்படையால் கைது நடவடிக்கைக்கு உள்ளானவர்களை விடுவிப்பது போன்ற விவகாரம் குறித்து விவாதிக்க இராமேஸ்வரம் துறைமுகத்தில், மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கைச் சிறைகளில் உள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுபது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரியும், படகுகளை விடுவிக்க கோரியும், முதற்கட்டமாக, ஆகஸ்ட் 13 ஆம் தேதி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள 61 ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், தொடர் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் பிரச்சனை இன்றி கடலில் மீன் பிடிப்பதற்கு இரு நாட்டு அரசும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரை இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
Related posts
Click to comment