மாநிலங்களவை எம்.பி பதவியேற்கும் கமல்ஹாசன்மற்றும் திமுக உறுப்பினர்கள்.!
மக்கள் நிதி மைய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மற்றும் திமுக தலைமை வழக்கறிஞர் வில்சன் உள்பட மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட நான்கு பெரும் இன்று பதவியேற்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர்களாக இருந்த அன்புமணி ராமதாஸ், என்.சந்திரசேகரன், மு. முகமது அப்துல்லா, பி.வில்சன், மு.சண்முகம், வைகோ ஆகியாரது பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதனையொட்டி மாநிலங்களவையில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கமல்ஹாசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் , புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை எம்.பி.கள் ஜூலை 25ம் தேதியான இன்று பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிவிப்பின்படி, இன்று டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய 4 பேரும் இன்று பதவியேற்கின்றனர்.
இதற்காக கமல்ஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்களின் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதை மற்றும் கடமையை நான் செய்ய உள்ளேன். இதை நான், பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோர் வரும் 28ஆம் தேதி திங்கள் கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..