மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாகப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சுந்தரேசன். அவருக்கு பழுதடைந்த பழைய வாகனம் ஒதுக்கப்பட்டதால் அந்த வாகனம் தேவையில்லை என்று திரும்ப ஒப்படைத்து விட்டு, தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே சென்றார். அவர் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது.
இதையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மதுவிலக்கு அமலாகப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், எஸ்.பி. இன்ஸ்பெக்டர், ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசீர்வாதம் போன்றோர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேட்டியளித்தார்.
இதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் விசாரணை நடத்தி, தனது அறிக்கையை டி.ஜி.பி. சங்கர் ஜூவாலிடம் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீராஜ் குமாரிடம் பரிந்துரைத்துள்ளார்,டி.ஜி.பி. சங்கர் ஜூவால். இதையடுத்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அரசு ஊழியருக்கான விதிமுறைகளை மீறி பணி ஒழுங்கின செயலில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.