திமுகவுக்கு எதிரான கட்சிகள் அதிமுக, பாஜக கூட்டணியில் இணையலாம் என்று எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக அழைப்பு விடுத்திருந்திருந்தார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என விஜயின் தவெக உட்பட பல கட்சிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார் நிலையில், அதனை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது. மேலும், மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புதிய வரலாறு படைக்கும் என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் சேலத்தில் நடந்த தவெக கொள்கை விளக்கக் கூட்டத்தில், தவெக தனித்துப் போட்டியிடும் என முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரும்பாத காரணத்தாலேயே எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பை பல கட்சிகள் புறக்கணித்து வருவதாக அதிமுகவினர் மத்தியிலேயே பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.