கட்டுக்கடங்காத பக்தகோடிகளின் அரோகரா கோஷசத்திற்கு மத்தியில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெற்றுவருகிறது. காலை 6.05 மணிக்கு தொடங்கி 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் நேரத்தில், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் என அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுவருகிறது.
அதிகாலை 12ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறும் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் எளிதாக கண்டுகளிக்கும் வகையில், பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 6000 போலீசார் குவிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண குவிந்திருப்பதால், அவர்கள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்க ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல கும்பாபிஷேக நீர், பக்தர்கள் மீது தெளிப்பதற்கு 20 ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திருச்செந்தூர் வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் நின்று செல்வதற்கு 3 தற்காலிக பேருந்து நிலையங்களும் திருச்செந்தூரில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கும்பாபிஷேகத்தை காண ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டதால், பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்து நெரிசல் ஏற்படுவது பெருமளவில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கும்பாபிஷேகத்தை காண வெளிநாட்டிலிருந்தும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அமைச்சர் சேகர்பாபு, ஆதீனங்கள் பலர் முன்னிலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோயில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது.
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு; பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தூவப்பட்டு வருகிறது.
-செல்வம்