தமிழகம் 108 ஆம்புலன்ஸ் சேவை மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் எண்ணற்ற மக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் பொது கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வாகனம் அவசர நிமித்தமாக நுழைந்த போது, ஆம்புலன்ஸ் டிரைவரை எச்கரிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
இதையடுத்து தற்போது துறையூர் அருகே அதிமுகவினரின் கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததாக கூறி ஆம்புலன்ஸை தடுத்து, டிரைவர் செந்தில்குமாரை அதிமுகவினர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை, ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. தனி நபரோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை என்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள மக்கள் நல்வாழ்வு துறையின் சுற்றறிக்கையில், 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும், அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம். 108 ஆம்புலன்ஸ் தேவைக்கான அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு, முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது. 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தாக்குதலில் ஈடுபடும் நபர்களுக்கு மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts
Click to comment